ஸ்காபரோ மருத்துவமனைகளுக்கு 26 மில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஒன்ராரியோவின் ஸ்காபரோ – றூஜ் பார்க் மாநில சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் தெரிவித்தார்.
கொரோனா நோய்த்தொற்றால் உருவான நிதி நெருக்கடியிலிருந்து மருத்துவமனைகளை விடுவிப்பதற்கு உதவுமுகமாக முன்னரே அறிவிக்கப்பட்ட 1.2 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான நிதி ஒதுக்கீட்டின் ஒரு பகுதியான இந்நிதியானது மருத்துவமனைகளின் மீதான நிதியியல் அழுத்தத்தினைக் குறைப்பதுடன் ஒன்ராறியோ வாழ் மக்களின் மருத்துவ தேவைகளுக்கும் அவர்களுக்கான உயர்தர சேவையை தொடர்ந்து வழங்குவதற்கும் பயன்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், இந்நிதியானது கொரோனா நோய்த்தொற்றினால் உருவாகும் எத்தகைய மாறுபட்ட நெருக்கடி நிலையையும் மருத்துவமனைகள் சமாளிப்பதற்கு உதவியாக அமையும். ஒன்ராறியோவிலுள்ள பல மருத்துவமனைகள் அதிகரித்த நோய்த்தொற்றால் ஏற்பட்ட நிலைமையின் நிமித்தம் தமது வருடாந்த நிதி ஒதுக்கீட்டுக்கான பற்றாக்குறையால் நெருக்கடிக்கு முகங்கொடுத்து வருகின்றன.
முக்கியமான இத்தருணத்தில் ஒன்ராறியோவிலுள்ள மருத்துவமனைகள் தமது நிதிநிலையில் ஸ்திரத்தன்மையுடன் விளங்குவது இன்றியமையாதது.
எனவேதான் ஒன்ராறியோ அரசானது வரலாற்றுத் தேவையான மருத்துவமனைகளின் நிதிப்பற்றாக்குறையைப் போக்கும் விதத்தில் இந்நிதியினை வழங்குகிறது. இந்த 26.8 மில்லியன் நிதி ஒதுக்கீடானது ஸ்காபரோ மருத்துவமனைகளின் நிதிநிலையை வலுவாக வைத்திருக்க உதவுவதுடன் ஸ்காபரோ வாழ் மக்களுக்குத் தேவையான உயர்தர மருத்துவ பராமரிப்பையும் வழங்கும் அவர் மேலும் தெரிவித்தார்.