7 தமிழர்களின் விடுதலையில் ஆளுநர் ஏற்படுத்தும் தாமதம் குறித்து சீமான் அதிருப்தி வெளியிட்டுள்ளார்

441

7 தமிழர்களின் விடுதலை தொடர்பில் ஆளுநர் தாமதப்படுத்துவதன் மூலம் அவர் யாருக்கானவர் என்பது நமக்குத் தெரிகிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் நாள் அன்று நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற காவிரி உரிமை மீட்புப் பேரணியின் போது தனது உயிரை தீக்கிரையாக்கிக்கொண்ட “காவிரிச்செல்வன்” விக்னேசுவின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

இதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ள அவர், 7 தமிழர்களின் விடுதலை தொடர்பில் நீண்ட கால சட்டப்போராட்டத்தின் விளைவாகத்தான் உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது என்பதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்பிறகு 161ஆவது சட்டப்பிரிவை பயன்படுத்தி, அமைச்சரவைத் தீர்மானத்தை நிறைவேற்றி, அதற்கு ஆளுநரை ஒப்புதல் அளிக்கச் செய்வதுதான் எழுவரின் விடுதலைக்கான வாய்ப்பாக இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதில் ஆளுநர் தாமதப்படுத்துவதன் மூலம் அவர் யாருக்கானவர் என்பது நமக்கு தெரிகின்றது எனவும், அந்த தீர்மானத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காவிட்டால் போராட்டங்களை முன்னெடுத்து அழுத்தம் கொடுத்து விடுதலையைச் சாத்தியப்படுத்துவோம் என்றும் சீமான் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *