முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

92 உயிர்களை பலி வாங்கிய ராணுவ விமானத்தின் கருப்பு பெட்டி கிடைத்தது

1079

சிரியாவின் லட்டிக்கா மாகாணத்தில் ஹமெய்மிம் என்ற இடத்தில் ரஷிய படைகளுக்காக ராணுவ தளம் அமைத்து தரப்பட்டுள்ளது. கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் போர் விமானங்கள் இந்த முகாமில் இருந்துதான் புறப்பட்டு செல்கின்றன.

இந்நிலையில், வரும் புத்தாண்டு தினத்தையொட்டி சிரியாவில் முகாமிட்டுள்ள தங்கள் நாட்டு ராணுவ வீரர்களுக்காக கேளிக்கை மற்றும் இசை நிகழ்ச்சியை நடத்த ரஷியா முடிவு செய்தது.

இதற்காக, சர்வதேச அளவில் பிரசித்தி பெற்ற ராணுவ இசைக்குழுவினரான அலெக்சான்ட்ரவ் என்செம்ப்ளே இசைக்குழுவினரையும், அந்நாட்டின் பிரபலமான சில பத்திரிகை நிருபர்களையும் அங்கு அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, அவர்களை சுமந்து கொண்டு டி.யு–154 ரக ராணுவ விமானம் நேற்று முன்தினம் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் இருந்து சிரியாவின் லட்டாகியா நகரை நோக்கி புறப்பட்டது. அந்த விமானத்தில் இசைக்குழுவினர், ஊடக நிருபர்கள் 84 பேரும் விமானிகள் சிப்பந்திகள் 8 பேரும் என மொத்தம் 92 பேர் பயணம் செய்தனர்.

இந்த விமானம் வழியில் ரஷியாவில் உள்ள சோச்சி மாகாணத்தில் ஆட்லர் விமான நிலையத்தில் தரையிறங்கி, பெட்ரோல் நிரப்பிகொண்டு, உள்ளூர் நேரப்படி அதிகாலை சுமார் 5 மணியளவில் மீண்டும் பயணத்தை தொடர்ந்தது.

அங்கிருந்து புறப்பட்டு சென்ற 20 நிமிடத்தில் ரேடார் கண்காணிப்பு திரையில் இருந்து அந்த விமானம் மறைந்தது. அதைத் தொடர்ந்து, மாயமான அந்த விமானத்தை தேடும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன.

நூற்றுக்கணக்கான ராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் 27 கப்பல்களில் சுமார் 3 ஆயிரம் பேர் தேடும் பணியில் ஈடுபட்டனர். சிலமணி நேரத்துக்கு பின்னர் அந்த விமானம், கருங்கடல் பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது தெரிய வந்தது.

அந்த விமானத்தின் சிதைவுகள் சோச்சி நகர கடலோர பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டன. சோச்சி நகர கடலோரத்தில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

இந்த விபத்தில் பயணிகள், சிப்பந்திகள் என 92 பேரும் பலியாகி இருக்க வேண்டும், யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என்று மாஸ்கோவில் இருந்துவரும் தகவல்கள் கூறுகின்றன. பலியானவர்களின் உடல்களை தேடி கைப்பற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இந்த விமான விபத்துக்கு பயங்கரவாத தாக்குதலோ, மோசமான வானிலையோ காரணமாக இருக்காது என்றும், விமானத்தின் தொழில் நுட்பக்கோளாறு அல்லது விமானியின் தவறுதான் காரணமாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

இருப்பினும், முறையான விசாரணையை ரஷிய விசாரணைக்குழு தொடங்கி உள்ளது. விபத்து பற்றிய விவரங்கள் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு தெரிவிக்கப்பட்டவுடன் நேற்றைய (26-ம் தேதி) நாளை தேசிய துக்க தினமாக அனுசரிக்குமாறு நாட்டு மக்களை கேட்டு கொண்டார்.

கருங்கடல் பகுதியில் கடந்த இருநாட்களாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் பத்துக்கும் அதிகமான உடல்களை இதுவரை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த விபத்துக்கான மூலக்காரணம் என்ன என்பதை தெளிவாக தெரிந்து கொள்வதற்காக விமானத்தில் இருந்த கருப்பு பெட்டிகளை தேடும் பணியும் முழுவீச்சில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், விபத்துக்குள்ளான விமானத்தில் கருப்பு பெட்டிகளில் ஒன்று இன்றுகாலை கண்டுபிடிக்கப்பட்டதாக மாஸ்கோவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *