99 சதவீதமான தமிழ் அரசியல் கைதிகள் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

437

தடுப்பிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 100இற்கு 99 வீதமானவர்கள் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டே கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் இது மனித நீதிக்கு எதிரானதென்றும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ள நடைபவணி இன்று அநுராதபுரத்தை சென்றடைந்த நிலையில், குறித்த நடைபயணத்தில் கலந்துகொண்டுள்ள அருட்தந்தை சக்திவேல் கருத்துத் தெரிவித்த போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் பயங்கரவாத தடைச் சட்டத்தை அனைத்துலக சமூகமே ஏற்றுக்கொள்ளாத நிலையில், அதன் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் விபரித்துள்ளார்.

அதுமாத்திரமன்றி, பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு மாற்றீடாக கொண்டுவரப்படவுள்ள சட்டம் முழு நாட்டிற்கும், குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு எதிரானதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் இந்தச் சட்டத்திற்கு எதிராக போராடுவோம் என்றும், தற்போது உணவுப் புறக்கணிப்பில் ஈடுபடும் அரசியல் கைதிகளின் போராட்டம் வெற்றி பெற வேண்டும் என்றும் அருட்தந்தை சக்திவேல் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுக்கும் நடைபவணி இன்றைய நாள் அநுராதபுரம் சிறைச்சாலையை சென்றடைய உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 9ஆம் நாள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த நடைபவணி, 5 நாட்களாக தொடர்ந்து இன்றைய நாள் அநுராதபுரத்தை சென்றடைந்துள்ளது.

இந்த நிலையில், அநுராதபுரம் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை இன்றைய நாள் சந்திக்க உள்ளதாக நடைபவணி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *