இனப்படுகொலை நடந்த முல்லைத்தீவு மண்ணில், மீண்டும் கலாசாரப் படுகொலை இடம்பெறுவதாக, வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
“2009ஆம் ஆணடில் முள்ளிவாய்க்கால் மண்ணில் எப்படி ஒரு தமிழினப் படுகொலை அரங்கேற்றப்பட்டதோ, அதே மே மாதத்தில், முல்லைத்தீவு – குமழமுனை, குருந்தூர் மலையில், தமிழர்களின் கலாசார மத அடையாளங்களை பிரதிபலித்த ஆதிசிவன் ஐயனார் அமைந்திருந்த இடத்தில், ஒரு கலாசார படுகொலை அரங்கேறியுள்ளது.
தொல்லியல் என்ற போர்வையில், குறித்த பகுதியைக் கையகப்படுத்தி, பௌத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டு, புத்தரின் சிலையை வைத்து, பௌத்த பிக்குகளால் பிரித்து ஓதல் நடைபெற்றுள்ளது.
இவ்வாறான ஒரு கலாசாரப் பகுதி திட்டமிட்ட வகையில் அழிக்கப்படுவது, தமிழர்களின் கலாசாரத்தை இராணுவப் பிடிக்குள் வைத்து மேற்கொள்ளப்படும் படுகொலையாகவே அமைந்துள்ளது.
பெரும் தொற்று எனப் பிரகடனப்படுத்தி, இறுக்கமான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு மக்களை கோரும் சிறிலங்கா அரச இயந்திரம், தாங்களே அப்பட்டமாக மீறுகின்ற மிக அவலமான நிலை குருந்தூர் மலையில் இடம்பெற்றுள்ளது.
இதன்மூலம், சட்டம் யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளதுடன், எதேச்சதிகாரம் மேலோங்கி உள்ளதையே இவ்வாறான செயற்பாடுகள் வெளிப்படுத்தியுள்ளன’” என்றும் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.





