அமெரிக்காவினால் மிகவும் தீவிரமாக தேடப்பட்டுவந்த குற்றவாளி ஒருவரை மொன்றியலில் மிதிவண்டியில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மொன்றியல் மிதிவண்டிப் பாதைப் பகுதியில் வழக்கமான சுற்றுக்காவல் மற்றும் சோதனையினை மேற்கொண்ட காவல்துறையினர், குறித்த அந்த நபரையும் மேலும் ஒருவரையும் கடந்த புதன்கிழமை போதைப் பொருள் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனையிட்டுள்ளனர்.
அவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்துமாறு அதிகாரிகளால் கோரப்பட்ட போது, குறித்த அந்த சந்தேக நபர் அங்கிருநது தப்பியோடிச் செல்ல முற்பட்டதாகவும், ஒருவாறு தடுத்து நிறுத்தப்பட்ட அவரால் காண்பிக்கப்பட்ட அமெரிக்க அடையாள அட்டையும் போலி போன்று காண்ப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனை அடுத்து மேலதிக அவரைக் விசாரணைகளுக்காக காவல்நிலையம் அழைத்துச் சென்ற அதிகாரிகள், அவரது கைரேகையை பெற முயன்ற போது, அவரது வலது கை விரல் முனை இல்லாதிருந்ததாகவும் கூறப்படுகிறது.
இருந்த போதிலும் ஏனைய விரல் ரேகைகளின் உதவியுடன் அடையாளங்களை பரிசீலித்த அதிகாரிகள், குறித்த அந்த நபர் அமெரிக்காவில் மிகப்பெரும் போதைப் பொருள் மற்றும் ஆயுத கடத்தல் நடவடிக்கை தொடர்பில் தேடப்பட்டுவரும் நபர் என்பதனை கண்டறிந்துள்ளனர்.
போதைப் பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் நடவடிக்கை குழு ஒன்றின் தலைவராக அமெரிக்க அதிகாரிகளால் வகைப்படுத்தப்பட்டுள்ள அந்த நபர், பல்வேறு போதைப் பொருள் கடத்த்ல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஒன்ராறியோ மாகாண காவல்துறையாலும் தேடப்பட்டு வந்துள்ளார்.




