முக்கிய செய்திகள்

MV சண் சீ கப்பலில் ஈழ அகதிகளை அழைத்து வந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நால்வர் மீதான வழக்கு -விசாரணைகள் ஆரம்பம்

1488

வன்னி இறுதிப் போரின் பின்னர் எம்.வி. சண் சீ எனப்படும் கப்பல் மூலமாக சுமார் 500 ஈழ ஏதிலிகளை கனடாவுக்குள் அழைத்து வந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நான்கு பேர் மீதான வழக்கு விசாரணைகள் நேற்று பிரிட்டிஷ் கொலம்பிய உச்சநீதிமன்றில் ஆரம்பமாகியுள்ளன.

தென்கிழக்காசிய நாடு ஒன்றில் இருந்து புறப்பட்ட குறித்த அந்த கப்பல் 2010ஆம் ஆண்டு கனடாவை வந்தடைந்த போது அதில் 492 பேர் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதன் போது, கனடாவுக்குள் நுளைவதற்கான எந்தவொரு சட்டபூர்வ பயண ஆவணமும் இன்றி அவர்களை நாட்டுக்குள் அழைத்து வந்ததாக லெஸ்லி இமானுவல், குணறொபின்சன் கிறிதுராஜா, நடராஜா மகேந்திரன், தம்பிநாயகம் ராஜரட்ணம் ஆகிய நால்வர் மீதும் குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

இவ்வாறான நிலையிலேயே குறித்த அந்த கப்பல் கனடாவை வந்தடைந்து ஆறு ஆண்டுகளின் பின்னர் வன்கூவரில் அமைந்துள்ள பிரிட்டிஷ் கொலம்பிய உச்ச நீதிமன்றில் இந்த நால்வர் மீதான வழக்கு விசாரணைகள் நேற்று ஆரம்பமாகியுள்ளன.

நேற்றைய இந்த விசாரணையின் ஆரம்பத்தில், 12 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு முன்பு தனது அறிக்கையைத் தாக்கல் செய்த அரச தரப்பு சட்டத்தரணி, குறித்த அதந் கப்பலில் வந்தவர்களிடம் முற்பணமாக 5,000 டொலர்களும், கனடாவை வந்தடைந்ததும் 25,000 டொலர்களும் என மொத்தமாக ஆளுக்கு தலா 30,000 டொலர்கள் அறவிடப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

கனடாவுக்குள் நுளைய விரும்பும் எந்தவொரு இலங்கையருக்கும் கனேடிய அரசாங்கத்தினால் அனுமதிக்கப்பட்ட பயண ஆவணம் இருக்க வேண்டும் என்பது கட்டாயம் என்ற நிலையில், குறித்த அந்த கப்பலில் வந்த எவரிடமும் அவ்வாறான ஆவணங்கள் காணப்படவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2010ஆம் ஆண்டு யூலை மாதம் 5ஆம் நாள் அந்த கப்பல் தாய்லாந்து கடற்பகுதியில் இருந்து புறப்படுவதற்கு முன்னர், பல பயணிகள் சில மாதங்களாகவே கப்பலில் தங்கவைக்கப்பட்டிருந்ததாகவும், 493 பேருடன் பயணத்தை ஆரம்பித்த கப்பலில் இருந்த ஒருவர் இடை வழியில் நோய்வாய்ப்பட்டு இறந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் குறித்த அந்த கப்பல் பயணிகள் கனடாவை வந்தடையும் வரையிலான மேலும் பல்வேறு தகவல்களும் அரச தரப்பு வழக்குரைஞரால் நேற்று முன்வைக்க்பபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் எட்டு வாரங்களுக்கு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *