போர்காலத்தில் அரச படையினர் அப்பாவி மக்களை படுகொலை செய்தனர் எனவும், தற்போது அதிகாரத்திலுள்ள நல்லாட்சி அரசாங்கம் தமிழினத்தின் இருப்புக்களை படுகொலை செய்து வருகிறது என்றும் வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் குகதாஸ் தெரிவித்துள்ளார்.
யாழ். செம்மணி பகுதியில் சிறிலங்கா படையினரால் படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருஷாந்தி குமாரசாமியின் 22ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வில் பங்கேற்று கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
போர்க் காலத்தில் தென்னிலங்கை அரசாங்கம் பயங்கரவாதம் என்ற பெயரில் இயந்திரத்தனமான கட்டமைப்பின் படுகொலைகளை அரங்கேற்றியிருந்தன என்றும், காணாமல் ஆக்கப்பட்டோரும் அந்த கட்டமைப்பின் ஒரு அங்கமே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் போரின் முன்னரான படுகொலைகள் மாற்று வடிவத்தில் இன்னும் அரங்கேற்றுப்பட்டுக் கொண்டே இருக்கின்றன எனவும், 2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம், நல்லாட்சி எனும் பெயரில் தொல்லியல் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றை கொண்டு தமிழர்களின் இருப்பை அழித்து வருகின்றன எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





