இனப்படுகொலை தொடர்பில் சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தினை வழங்கியுள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
இதனை அடிப்படையாக வைத்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஊடாக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
அம்பாறை மாவட்டம் உஹனையில் 09.01.2021 அன்று நிகழ்வொன்றில் உரையாற்றும் போது ஜனாதிபதி, நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவுக்குக் கொலை அச்சுறுத்தல் விடுத்தது மட்டுமல்ல தமிழ்த் தேசிய இனத்தின் போராட்டத்தையும் எதிர்த்து அச்சுறுத்தி, போர் முழக்கம் செய்துள்ளார் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறிலங்கா ஜனாதிபதியின் பொது வெளியுரை அநாகரிகமானது மட்டுமல்ல சிறிலங்கா நாட்டையே நாகரிகமற்ற நாடாக்கியுள்ளது என்றே கூற வேண்டும்.
நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மட்டுமல்ல நாட்டு மக்களின் ஜனநாயகத்திற்கும் இராணுவமயமான ஒரு ஆட்சியின் கீழ் அடக்கி ஒடுக்கப்படு வதையும் அம்பலப்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
இனப்படுகொலைக்குள்ளாகி வரும் தமிழ் தேசமக்களுக்கும் அவர்களின் ஜனநாயக உரிமைப் போராட்டங்களையும் விடுக்கப்பட்டுள்ள போர் அபாயத்தை, இனப் படுகொலை அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்





