சிறிலங்கா அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தக் கோரி, யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட உணவு தவிர்ப்புப் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் இடம்பெற்று வருகிறது.
நல்லை ஆதீனம் முன்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட சுழற்சி முறையிலான இந்த போராட்டத்தில் பொதுமக்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள், பங்கேற்று வருகின்றனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து வந்த, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பலரும் இன்று இந்த போராட்டத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.
லண்டனில் உணவுதவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வரும் அம்பிகை செல்வக்குமாரின் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையிலும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.





