லண்டனில் போராட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களை நோக்கி அச்சுறுத்தும் வகையில் சைகை காண்பித்த மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்னான்டோ, வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றம் விதித்த தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
2018ஆம் ஆண்டு லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்துக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களை நோக்கி கழுத்தை அறுத்துவிடுவது போன்று சிறிலங்கா தூதரக பாதுகாப்பு ஆலோசகர் மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்னான்டோ சைகை மூலம், எச்சரிக்கை செய்திருந்தார்.
அவரது இந்தச் செயலுக்கு எதிராக புலம்பெயர் தமிழர்களால் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், 2019ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட தீர்ப்பில், மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்னான்டோ குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதுடன், அவருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த தீர்ப்புக்கு எதிரான பிரித்தானிய மேல் நீதிமன்றத்தில், மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்னான்டோ சார்பில் சிறிலங்கா தூதரகத்தினால் மேன்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கில், மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்னான்டோ சார்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை ஏற்றுக் கொண்ட மேல்நீதிமன்றம், வியன்னா பிரகடனத்துக்கு அமைய, அவருக்கு இராதந்திரிகளுக்கான தண்டனை விலக்குரிமை உள்ளதையும் உறுதிப்படுத்தியுள்ளது.
இதையடுத்து, மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிராக வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தினால் அளிக்கப்பட்ட தீர்ப்பை ரத்துச் செய்து, அவரை விடுவித்துள்ளது.





