இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் லொயிட் ஒஸ்ரின் சிறிலங்கா விவகாரங்கள் குறித்தும் இந்திய தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்தியிருப்பதாக கூறப்படுகிறது.
புதுடெல்லியில் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் லொயிட் ஒஸ்ரின் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்டவர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
இதன்போது, பிராந்திய நாடுகளின் விவகாரங்கள் பற்றி கலந்துரையாடப்பட்ட போது, சிறிலங்காவின் நிலவரங்கள் குறித்தும் பேசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக சிறுபான்மையினர் மீதான மனித உரிமை மீறல்கள் அதிகரிப்பது, மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக் கூறுவது மற்றும் சட்டத்தின் ஆட்சி போன்ற விடயங்கள் தொடர்பாக இந்திய வெளிவிவகார அமைச்சருடன் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் லொயிட் ஒஸ்ரின் கலந்துரையாடியுள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த போது, உலகில் எந்த நாடாக இருந்தாலும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பதும், சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வதும் அமெரிக்காவுக்கு முக்கியம் என்றும் அவர் வலியுறுத்திக் கூறியுள்ளார்.





