பேரறிவாளனுக்கு வழங்கப்பட்டிருந்த ஒரு மாத சிறை விடுப்பு நாளையுடன் முடியும் நிலையில் அவரது சிறைவிடுப்பை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு, தமிழக அரசு சார்பில், கடந்த ஆகஸ்ட் 24 ந்தேதி, ஒரு மாதம் சிறை விடுப்பு வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து அவர் சிறை விடுப்பில் விடுதலை ஆனார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தந்தையை கவனிக்க பேரறிவாளனுக்கு இந்த சிறை விடுப்பு வழங்கப்பட்டது.
இந்த சிறை விடுப்பு நாளையுடன் முடியும் நிலையில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தனது மகனின் சிறை விடுப்பை மேலும் ஒரு மாத நீட்டிக்க வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைத்திருந்தார். இதனையடுத்து சிறை விடுப்பு நீட்டிப்புகான கோப்புகள் முதல்வரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில் பேரறிவாளன் சிறை விடுப்பு மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதாக இன்று (செப்டம்பர் 23) மதியம் தகவல் வெளியாகினது. பேரறிவாளனின் சிறை விடுப்பை மேலும் 1 மாதம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக கூறப்பட்டது. ஆனால், இந்தத் தகவலை தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் மறுத்தார். “பேரறிவாளனின் சிறை விடுப்பு நீட்டிப்பு குறித்து இதுவரை தமிழக அரசு எந்த அரசாணையும் வெளியிடவில்லை” என்று அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் தற்போது, பேரறிவாளனின் சிறை விடுப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
பேரறிவாளன் சிறை விடுப்பு நீட்டிக்கப்பட்டுள்ளதை, தமிழக எதிர்க்கட்சி தலைவரும் திமுக செயல் தலைவருமான ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.





