மாகாணங்களுக்கான காவல்துறை அதிகாரத்தினை எதிர்த்து விவாதத்திற்குள்ளாக்குவோர், தமிழ் மக்களுக்கு நிர்வாக அதிகாரங்கள் கூட வழங்கப்படக்கூடாது என்று சிந்திப்போராகவே உள்ளனர் என்று வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் தெரிவித்துள்ளார்.
வட மாகாணம் உள்ளிட்ட சபைகளுக்கு காவல்துறை அதிகாரம் வழங்க வேண்டாம் என்று முன்னாள் காவல்துறை பிரதானிகள் சங்கம் தங்களது ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதுடன், இதனை அது கோரிக்கையாக இலங்கை அரசாங்கத்திற்கும் அனுப்பியுள்ளது.
இவ்வாறாக தென்னிலங்கையில் இருந்து வெளிக்கிளம்பும் கருத்துக்கள் இன்றும் அதிகார பகிர்வில் நிலவும் மோசமான எண்ணங்களையே காட்டுகின்றன எனவும், காவல்துறை அதிகாரம் அரசியலமைப்பின் 13 திருத்தத்தில் உள்ள போதிலும், அதனை நடைமுறைப்படுத்துவற்கு தடைகள் உள்ளன என்பதையும் அவர் சுட்டிக்காட்டியள்ளார்.
காவல்துறை அதிகாரம் வடக்கிற்கு வழங்கப்பட்டால் அது தனிநாட்டு அந்தஸ்த்திற்கு உரித்தானதாக அமைந்துவிடும் என்ற விளக்கமற்ற சிந்தனை தென்னிலங்கை மட்டத்திலும், அரசியலில் உள்ள சிங்களத் தலைவர்கள் பலரிடத்திலும் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
காவல்துறை அதிகாரம் என்பது நிர்வாக ரீதியிலான ஓர் விடயமாகும் என்பதையும், மாகாண மட்டத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துவதற்கு மாகாண மட்டத்தில் காவல்துறை அதிகாரம் பகிரப்படுவது கட்டாயமானதாகும் என்பதையும் அவர் விபரித்து்ளளார்.
தேசிய பாதுகாப்பு, அரசுக்கு எதிரான குற்றங்கள், அரச சொத்துக்களுக்கு எதிரான குற்றங்கள், அரச அதிகாரிகளுக்கு எதிரான குற்றங்கள், மத்திய அரசிற்குட்பட்ட விடயங்கள் தொடர்பான குற்றங்கள், மாகாணங்களுக்கிடையிலான குற்றங்கள் உட்பட பல்வேறு குற்றங்கள் மாகாண காவல்துறையினரின் அதிகாரத்தின் கீழ் அமையாது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இப்படியிருக்கும் போது தமிழ் மக்களுக்கு குறைந்தளவான அதிகாரங்கள் கூட செல்லக் கூடாது என்பதற்காகவா வடக்கிற்கு காவல்துறை அதிகாரம் வழங்கப்படக் கூடாது என்று அடம்பிடிக்கின்றனர் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.





