யாழ்ப்பாணம் மயிலிட்டி துறைமுகத்தை மறுசீரமைத்து மீள இயக்கும் பணிகள் இன்று இல்ஙகை சனாதிபதியினால் தொடக்கி வைக்கப்பட்டுள்ளன.
போருக்கு முற்பட்ட காலத்தில் இலங்கையின் மீன்பிடி உற்பத்தியில் 30 சதவீதத்திற்கு மேல் மயிலிட்டி துறைமுகம் பங்களிப்பு செய்துள்ள நிலையில், போர் காரணமாக செயழிலந்த இந்தத் துறைமுகத்தை மீளச் செயற்படுத்தும் பணிகள் 2018 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் பாதீட்டில் நிதி ஒதுக்கிடப்பட்டு ஆரம்பிக்கப்படுவதாக வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கான சனாதிபதியின் சிறப்பு செயலணியின் செயலாளர் சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.
இதற்கமைய முதற்கட்டத்தில் 150 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில், நுழைவாயிலை ஆழப்படுத்தல், அலைதடுப்பு நிலையம், குளிரூட்டல் அறைகள் உட்பட்ட அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன எனவும் அவர் விபரித்துள்ளார்.
அத்துடன் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் 30 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில், நிர்வாகக் கட்டிடம், மீன்பிடி வலைகள் பின்னும் நிலையம், நீர்த்தாங்கிகள், கழிவறைகள் என்பன அபிவிருத்தி செய்யப்பட உள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம் அரசாங்கத்தின் இரண்டாம் கட்ட நிதி ஒதுக்கீட்டில் 245 மில்லியன் ரூபாவில், அலைதடுப்பு கட்டுமானத்தின் முழுமையான புனரமைப்பு, ஏலமிடும் நிலையம், நுழைவாயிலை மேலும் ஆழப்படுத்தல் முதலான பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இநத் நிகழ்வில் உரையாற்றிய மைத்திரிபால சிறிசேன, வலி.வடக்கு மயிலிட்டிப் பகுதியில் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து இதுவரை விடுவிக்கப்பட்ட பாடசாலைகள் இரண்டு வாரங்களுக்கு மக்கள் பயன்பாட்டுக்குக் கையளிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
மயிலிட்டியில் விடுவிக்கப்படாத பிரதேசங்கள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கேட்டறிந்த அவர், அதனையடுத்து இராணுவத் தளபதிக்கு விவரங்களைத் தெரியப்படுத்தியதுடன், பாடசாலைகளை மக்கள் பயன்பாட்டுக்குக் கையளிப்பதற்கான ஏற்பாடுகளை இரண்டு வாரங்களுக்குள் மேற்கொள்வதாக மக்கள் முன்னிலையில் உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.





