அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமயிலான பிரதிநிதிகள் குழுவொன்று அணிசேரா மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவம் செய்யவுள்ளது.
வெனிசுலாவின் கெராகஸ் நகரில் நாளை முதல் எதிர்வரும் 18ம் திகதி வரையில் அணிசேரா நாடுகளின் 17ம் பொதுச் சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விசேட பிரதிநிதியாக மஹிந்த சமரசிங்க இந்த மாநாட்டில் பங்கேற்கின்றார்.
மஹிந்த சமரசிங்க மாநாட்டில் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.
இலங்கையின் தற்போதைய அரசியல் புனரமைப்பு, இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த மேற்கொள்ளப்படும் அரசியல் அமைப்பு ரீதியான மாற்றங்கள் என்பனவற்றை தெளிவுபடுத்த மாநாட்டை ஓர் சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ள இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சர்வதேச அரங்கில் இலங்கைக்கு கிடைத்துள்ள வரவேற்பினை மேம்படுத்திக் கொள்ளவும், அணிசேரா நாடுகள் அமைப்பின் முக்கிய உறுப்பினர்களில் ஒன்றான இலங்கையின் வெளியுறவுக் கொள்கைகள் பற்றியும் இந்த மாநாட்டில் இலங்கை தெளிவுபடுத்தவுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் அறிவுறுத்தல்களுக்கு அமைய வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் சிலரும் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர்.