ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூன் யாழ்ப்பாணம் வந்திருந்த போது, இடம்பெற்ற சில நிகழ்வுகள், தமிழ் மக்கள் தமது பிரச்சினைகளை ஒரே குரலில் வெளிப்படுத்தும் ஆற்றலை இழந்து விட்டனரா என்ற சந்தேகத்தைத் தான் ஏற்படுத்தியிருக்கிறது.
ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூனுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளும், வடக்கு மாகாண முதலமைச்சரும் தனித்தனியாக சந்தித்தமை, ஐ.நா பொதுச்செயலரின் கவனத்தை ஈர்க்க காணாமற்போனோர், இடம்பெயர்ந்தோர் நடத்திய வெவ்வேறான போராட்டங்கள் என்பனவே இந்தச் சந்தேகத்துக்கான காரணங்களாகும்.
அதாவது, பொதுநோக்கில் ஒருங்கிணையக்கூடிய வலு தமிழர்களிடம் இல்லாமல் போயுள்ளது என்பதையே இந்த இரண்டு சம்பவங்களும் எடுத்துக் காட்டியிருக்கின்றன.
ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூன் யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் வடமாகாண ஆளுநருடன் மட்டுமே சந்திப்புகளை நடத்துவார் என்றே முதலில் நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டது. வடக்கு மாகாண முதலமைச்சருடனான சந்திப்புக்கு இடமளிக்கப்பட்டிருக்கவில்லை.
வடக்கிற்கு, குறிப்பாக யாழ்ப்பாணம் செல்லும் வெளிநாட்டு, சர்வதேசப் பிரமுகர்கள் பெரும்பாலும் வடக்கு மாகாண ஆளுநரையும், முதலமைச்சரையும் தனித்தனியாகச் சந்தித்துப் பேசுவது அண்மைக்கால மரபாக மாறியிருக்கிறது.
அதேவேளை, வெளிநாட்டுப் பிரமுகர்கள் இலங்கை வரும்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்திக்கும் வழக்கமும் உள்ளது. அவ்வாறான சந்திப்புகள் பெரும்பாலும், கொழும்பிலேயே நடப்பது வழக்கம்.
கொழும்பில் நடக்கும் அத்தகைய சந்திப்புகளுக்கு மிக அரிதாகவே வடமாகாண முதலமைச்சர் அழைக்கப்படுவார்.ஆனால், ஐ.நா. பொதுச்செயலரின் பயண நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்ட போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பை யாழ்ப்பாணத்தில் நடத்த திட்டமிடப்பட்டது.
இந்த நிகழ்ச்சி நிரல் வெளிவிவகார அமைச்சுடன் இணைந்து தயாரிக்கப்பட்டது என்பதால், அதில் உள்நோக்கங்கள் ஏதும் இருந்ததா என்று சந்தேகம் கொள்வதற்கு இடமுண்டு.
கூட்டமைப்புடனான ஐ.நா. பொதுச்செயலரின் சந்திப்பு வழக்கத்துக்கு மாறாக, யாழ்ப்பாணத்தில் ஒழுங்குபடுத்தப்பட்டது போலவே, யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொள்ளும் அவர், வடமாகாண முதலமைச்சரைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்படாமையும் வழக்கத்துக்கு மாறானதாகவே இருந்தது. இது வடக்கு முதல்வரை அதிருப்தியடைய வைத்தது.
கூட்டமைப்பு பிரதிநிதிகளுடன் இணைந்து பான் கீ மூனைச் சந்திக்கலாம் என்று இரா.சம்பந்தன் அழைப்பு விடுத்திருந்த போதிலும், அதற்கு பிடிகொடுக்காமல், ஐ.நா. பொதுச்செயலரை தனியாகச் சந்திக்க வேண்டும் என்று கொழும்பிலுள்ள ஐ.நா. அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்.
இறுதியாக யாழ்.பொது நூலகத்தில் கூட்டமைப்பினரைச் சந்தித்த பின்னர், முதலமைச்சரைச் சந்திப்பார் ஐ.நா. பொதுச்செயலர் என்று அறிவிக்கப்பட்டது.எனினும், ஐ.நா பொதுச்செயலரின் யாழ்ப்பாண பயணம் தாமதமானதால், முதலமைச்சருடனான சந்திப்பு வெறும் 6 நிமிடங்கள் மாத்திரமே இடம்பெற்றது.
ஆனால், கூட்டமைப்புடனான சந்திப்பு 45 நிமிடங்கள் வரை இடம்பெற்றிருந்தது.இந்தக் கட்டத்தில், தமிழ் மக்களுக்கு மாத்திரமன்றி, வெளியிலுள்ள தரப்புகளுக்கும் ஒரு சந்தேகம் எழுவது இயல்பு.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவமும், அதன் ஆளுகையின் கீழ் உள்ள வடக்கு மாகாணசபையும் தனித்தனியான அரசியல் அபிலாஷைகளையும், நிகழ்ச்சி நிரல்களையும் கொண்டு இயங்குகின்றனவா என்பதே அந்தச் சந்தேகம்.
தமிழ் மக்களின் பிரச்சினைகள், அவர்களின் தேவைகள், அபிலாஷைகள் எல்லாமே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், வடக்கு மாகாண சபைக்கும் பொதுவானவைதான்.அப்படியிருக்கும்போது, ஒரே இடத்தில், தமிழ்மக்களின் பிரதிநிதிகள் என்று இரண்டு தரப்புகளாக, ஐ.நா. பொதுச்செயலரைச் சந்தித்தமை, சரியான செயலாகுமா?