பாராலிம்பிக்கில் தங்கம் வென்று சாதித்த தங்கமகன் தங்கவேலுவுக்கு இருக்கும் ஒரே கனவு என்பது தமது தாயார் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் என்பதே.
தங்கவேலு ஐந்து வயது குழந்தையாக இருந்தபோது, பேருந்து விபத்தில் அவரது வலதுகால் உடைந்துபோனது. அப்போது தங்கவேலுவின் மருத்துவ செலவிற்காக அவரது அம்மா சரோஜா மூன்று லட்சம் கடன் வாங்கியிருந்தார்.
வீடு வீடாக சென்று காய்கறி விற்கும் சரோஜாவால் மூன்று லட்சத்தை திருப்பிச் செலுத்தவே முடியவில்லை.
இது நாள் வரை அதற்கு வட்டி மட்டுமே கட்டி வந்திருக்கிறார். பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் பெற்றதன் மூலம் கிடைக்கும் பரிசுதொகையை வைத்து அந்த கடனை கட்ட போகிறார் தங்கவேலு.
மாதம் ரூ.5000 சம்பாதிக்கும் தன் அம்மாவால் ரூ.3 லட்சம் கடனை எப்படி அடைக்க முடியும்? அதனால் தான் எப்படியாவது இந்தப்போட்டியில் வென்றுவிட வேண்டும் என்கிற லட்சிய வெறியோடு விளையாடினேன் என கூறும் தங்கவேலு,
தற்போது கிடைக்கவுள்ள பரிசு பணம் மூலம் முதலில் எனது கடன் அடைக்க வேண்டும். இவ்வளவு வறுமையிலும் எனது கனவுகளுக்கு உதவிய என் அம்மாவுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை எற்படுத்தி கொடுக்க வேண்டும் என கனத்த இயத்துடன் தெரிவித்துள்ளார்.
மருத்துவ கடனை அடைத்தபிறகு, ஒரு வீடு கட்டுவதும், உயரம் தாண்டுதலில் உலக சாதனை செய்ய வேண்டும் என்பதும் தங்கவேலுவின் மற்றொரு லட்சியம். இதற்கான பயிற்சிகளை எடுக்க இந்தப் பணம் உதவும் என தங்கவேலு நம்புகிறார்.