மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு சொந்தமான கார் மோதிய விபத்தில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு சொந்தமான கார் ஒன்று உளுந்தூர்பேட்டை அருகே சென்று கொண்டிருந்த போது வண்டிப்பாளையம் என்ற இடத்தில் விபத்துக்குள்ளானது.
இதில் விவசாயி சக்திவேல் என்பவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு வந்த பொலிசார் வைகோவின் காரை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆம்புலன்ஸ் வாகனம் வருவதற்கு தாமதமானதால் உயிருக்கு போராடிய விவசாயி சக்திவேல் சம்பவயிடத்தில் உயிரிழந்ததாக தெரிய வந்துள்ளது.
இதனிடையே விவசாயி சக்திவேலுவின் உறவினர்களும் அப்பகுதி பொதுமக்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர். விபத்து நிகழ்ந்தபோது வைகோ காரில் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.