கனடா நாட்டில் நடுவானில் பறக்கும் விமானத்தில் நபர் ஒருவர் குதிக்க முயன்ற சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவில் உள்ள ரொரொன்றோ நகரில் இருந்து இரு தினங்களுக்கு முன்னர் WestJet என்ற விமானம் பயணிகளுடன் எட்மோண்டன் நகருக்கு புறப்பட்டுள்ளது.
சுமார் 4 மணி நேரப்பயணமாகும் அந்த விமானத்தில் 20 வயதான ஒரு பயணியின் நடவடிக்கை அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
விமானம் புறப்பட்ட நேரத்திலிருந்து மூன்றரை நேரமாக அவர் இறைவனை நோக்கி தொழுகை நடத்திக்கொண்டு வந்துள்ளார். பின்னர், விமானம் தரையிறங்குவதற்கு 30 நிமிடங்கள் இருந்தபோது அந்த நபர் இரண்டு முறை விமானத்தின் கதவுக்கு அருகில் சென்று வந்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பணிப்பெண் ஒருவர் அவரிடம் காரணத்தை கேட்டுள்ளார்.
அப்போது, ‘இங்கு இருப்பவர்கள் யாருக்கும் கடவுள் மீது நம்பிக்கை இல்லை. எனக்கு விமானத்தில் இருக்க விருப்பம் இல்லை. உடனடியாக நான் வெளியேற வேண்டும்’ என கதறியுள்ளார்.
நபரின் செயலால் அச்சம் அடைந்த பணிப்பெண் பிற பயணிகளின் உதவியை நாடியுள்ளார்.
சூழ்நிலையை உணர்ந்த சில பயணிகள் நபரை கட்டுப்படுத்த முயன்றுள்ளனர். ஆனால், அவர் தொடர்ந்து கதவை திறக்க வலியுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
பொறுமையை இழந்த பயணிகள் அந்த நபரை குண்டுக்கட்டாக தூக்கி விமானத்தில் உள்ள பின் இருக்கைக்கு தூக்கிச் சென்று கட்டிப்போட்டுள்ளனர்.
பின்னர் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதும் விபரம் அறிந்த பொலிசார் அந்த நபரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
எனினும், நபர் குறித்து எவ்வித தகவல்களையும் பொலிசார் மற்றும் விமான நிறுவன நிர்வாகிகள் வெளியிடவில்லை.
நடுவானில் நபர் ஒருவர் பறக்கும் விமானத்தில் இருந்து வெளியேற முயற்சித்த சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.