இலங்கையில் புதிதாக அமைக்கப்படவுள்ள அரசியலமைப்பு சீர்திருத்தம் திருப்திகரமானதாக அமையும் என தாம் நம்புவதாக நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் மிக முக்கியமான இரண்டு கட்சிகளும் இணைந்து கொண்டுவரவுள்ள இந்த புதிய அரசியலமைப்பின் மூலம், இலங்கையிலுள்ள சகல இன மக்களும் நல்லிணக்கத்துடனும் புரிந்துணர்வுடனும் ஒத்துழைப்புடனும் வாழ வேண்டும் என்பதே தமது நோக்கம் எனவும் அவர் கூறியுள்ளார்.
திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டத்தில் இணைத் தலைவர்களுள் ஒருவராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
1978 ஆம் ஆண்டுக்கு முன்னர் நடைமுறையில் இருந்த அரசியலமைப்பு, சிறிலங்கா சுதந்திரக் கட்சியால் கொண்டுவரப்பட்டது என்றும், இதற்கு ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ் மக்களும் அங்கீகாரம் வழங்கவில்லை என்பதையும் அவர் நினைவுபடுத்தியுள்ளார்.
அதன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியால் கொண்டுவரப்பட்ட அரசியல்மைப்பிற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் தமிழ் மக்களும் அங்கீகாரம் வழங்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் இலங்கை அரசியலில் முதன் முறையாக இந்த இரண்டு பிரதான கட்சிகளின் தலைவர்களும் இணைந்து தற்போது நல்லாட்சியை அமைத்துள்ளனர் என்றும், அவர்கள் இணைந்து தயாரித்துவரும் புதிய அரசியல் யாப்பு, தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையும் என தாம் நம்புவதாகவும் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.