சமஷ்டியை முறைமையை அடிப்படையாக கொண்ட அரசியல் தீர்வின் ஊடாகவே இனப்பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண முடியும் என்று இலங்கையின் முன்னாள் சனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்துகெர்ணடு உரையாற்றும்போதே இதனைத் தெரிவித்துள்ள அவர், பெரும்பான்மை சமுகத்துக்கு உள்ள அனைத்து உரிமைகளும் ஏனைய மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு சம உரிமைகள் வழங்கப்படுவதனால், பெரும்பான்மை மக்களுக்கு குறைவேதும் ஏற்படப் போவதில்லை என்பதையும் அவர் சுடடிக்காட்டியுள்ளார்.
இனப்பிரச்சினைகள் காணப்பட்ட தென்னாப்பிரிக்கா, கென்யா போன்ற நாடுகள், அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதன் அடிப்படையிலேயே தங்களின் பிரச்சினைகளை தீர்த்துக் கொண்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஒரு தனியான தீவாக இருந்த போதிலும், தனிப்பட்ட வரைமுறை ஒன்றை அமைத்துக் கொண்டு முன்செல்ல முடியாது எனவும், ஏனைய நாடுகளை உதாரணமாக எடுத்துக் கொண்டு, பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சந்திரிக்கா பண்டாரநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.