இன்று ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 71ஆவது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, பிரதமர் ஜஸ்டின் ரூடோ அமெரிக்காவின் நியூ யோர்க் நகரினைச் சென்றடைந்துள்ளார்.
கனேடிய பிரதமராக பதவியேற்ற பின்னர் அவர் பங்கேற்றும் முதலாவது ஐ.நா பொதுச் சபை மாநாடு இது என்ற வகையில், அவர் தனது கன்னி உரையினை நாளை செவ்வாய்க்கிழமை ஆற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ள பிரதமர் ஜஸ்டின் ரூடோவின் நிகழ்ச்சி நிரலில், அனைத்துலக ரீதியிலான அகதிகள் விவகாரம் முக்கிய இடம் வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அகதிகள் விவகாரம் தொடர்பிலான மாநாடு நாளை நடைபெறவுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும் யேர்மனி, சூவீடன், மெக்சிக்கோ, எதியோப்பியா, யோர்தான் ஆகிய நாடுகளின் தலைவர்களுடன், பிரதமர் ஜஸ்டின் ரூடோவும் அந்த மாநாட்டுக்கு இணைத் தலைமை வகிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இன்று இடம்பெறவுள்ள அகதிகள் தொடர்பிலான வட்டமேசை மாநாட்டிலும் கனேடிய பிரதமர் இணைத் தலைமை வகிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த மாநாடுகளின் போது, அகதிகளை உள்ளீர்க்கும் விடயங்களை மட்டும் கருத்தில் கொள்ளாது அதற்கு அப்பாற்பட்ட விடயங்கள் குறித்தும் பிரதமர் ஜஸ்டின் ரூடோ அதிக கவனம் செலுத்துவார் என்று தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக உள்வாங்கப்பட்ட அகதி மக்களை அந்தந்த பிராந்தியங்களில் உள்ள சமூகங்களுடன் ஒன்றிணைப்பதில் எதிர்நோக்கப்படும் சவால்களை சமாளிப்பது உள்ளிட்ட விடயங்களில் பிரதமர் அதிக சிரத்தை எடுத்துக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் நாளை பிரதம்ர் ஐ.நா பொதுச் சபையில் ஆற்றவுள்ள கன்னி உரையின் சாரம்சம், பரந்துபட்ட அளவிலான பொருளாதார வளர்ச்சி குறித்ததாகவே இருக்கும் என்று பிரதமரின் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.