அநுராதபுரம் சிறைச்சாலையில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் எதிர்வரும் 21ஆம் நாள் முதல் உணவுப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தியும், பல ஆண்டுகளாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மீதான வழக்குகள் தமிழ் பிரதேசங்களில் உள்ள நீதிமன்றங்களுக்கு மாற்றப்பட வேண்டும் என வலியுறுத்தியும் இந்த உணவுப் புறக்கணிப்பு போராட்டத்தினை மேற்கொள்வுள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது விடுதலையை அரசாங்கம் தாமதப்படுத்தும் பட்சத்தில், மீண்டும் உணவுப் புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக கடந்த ஓகஸ்ட் மாதம் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு பயணம் மேற்கொண்டிருந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்திருந்தனர்.
அத்துடன் தமது விடுதலை தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அனைத்துலகத்தையும் மக்களையும் ஏமாற்றும் வகையிலேயே தம்மை விடுதலை செய்வதற்கான சிறப்பு நீதிமன்றங்களை அரசாங்கம் அமைக்கின்ற என்றும், அதுவும் காலத்தை கடத்தும் ஒரு செயற்பாடே எனவும் அநுராபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர்.