ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு மன்றத்தில் கனடாவுக்கான உறுப்புரிமையை பெறுவதற்கான நடவடிக்கைகளை பிரதம்ர் ஜஸ்டின் ரூடோ உத்தியோகப்பற்ற்ற முறையில் ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
நேற்றைய நாள் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் தனது கன்னி உரையினை ஆற்றிய பிரமர் ஜஸ்டின் ரூடோ, பாதுகாப்பு மன்றத்தில் கனடாவுக்கான உறுப்புரிமையை வலியுறுத்தும் சமிக்கைகளை தனது உரையில் முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று சுமார் 12 நிமிடங்கள் உரையாற்றிய பிரதமர், மக்களை பிரித்து வைப்பதனை விடுத்து, அனைவரையும் ஒன்றுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரித்தானிய பிரதமர் தெரேசா மே ஆகியோரின் உரைகளையும் அடியொற்றி பேசிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ, தனது உரையில் பெரும்பாலும் பொருளாதாரம், சகிப்புத் தன்மை, பன்முகத் தன்மை போன்றவற்றை முதன்மைப்படுத்தியுள்ளார்.
அச்சத்தினை உருவாக்குவது இலகுவானது என்ற போதிலும், அந்த அச்சம் யாரும் ஒருவருக்கேனும் தொழில் வாய்ப்பையோ, உணவையோ பெற்றுத் தரப்போவதில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பார்ப்பதற்கு வேறு தோற்றத்திலோ, அல்லது தொழுகையில் வேறு விதமாகவே இருக்கிறார்கள் என்பதற்காக ஏனைய மக்கள் தொகுதியினரை நிராகரிப்பதனாலோ, குறைகூறுவதனாலோ எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வினைக் கண்டுவிட முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை உலகில் நிலைத்தன்மையற்று காணப்படும் இடங்களில் பாதுகாப்பினையும், அமைதியையும் ஏற்படுத்தும் வகையில் கனடா அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதையும் சுட்டிக்காட்டியுள்ள பிரதமர், நேட்டோ அமைப்பில் கனடாவின் பங்கினை வலியுறுத்தியதுடன், ஐ.நா அமைதிகாப்பு பணியில் கனடாவால் அதிகம் பங்காற்ற முடியும் எனவும் உறுதியளித்துள்ளார்.