போர்நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் உள்ள சிரியாவில் நள்ளிரவு வேளையில் அடையாளம் தெரியாத போர் விமானங்கள் மேற்கொண்ட குண்டுவீச்சுத் தாக்குதலில் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த மருத்துவர்கள் ஐவர் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் இவர்கள் மருத்துவ சேவை மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அனைத்துலக தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
சிரியாவின் அலெப்போ நகரின் தென்கிழக்கு பகுதியில் உள்ள கான் தவுமான் பகுதி, அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிரான ’ஜைஷ் அல்-பட்டா’ போராளிகள் வசம் உள்ள நிலையில், அந்த பகுதியிலேயே நேற்று நள்ளிரவு வேளையில் இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
இதன்போது அதிபர் பஷர் அல் ஆசாத் அரசாங்கத்திற்கு எதிரான போராளி குழுவினரும் பலியானதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
எனினும் இந்த விமான தாக்குதலை நடாத்தியது யார் என்பது தெளிவாக தெரியாத சூழலில், ரஷியா அல்லது சிரியா நாட்டு விமானப் படைகள் இந்த தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகங்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை அலப்போ நகருக்கு நிவாரண உதவிப் பொருட்களைக் கொண்டு சென்ற ஐ.நாவின் வாகனத் தொடரணி மீது கடந்த திங்கட்கிழமை விமானங்கள் நடாத்திய குண்டுத் தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனினும் குறித்த தாக்குதலை ரஷ்யாவே நடாத்தியது என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது.