இலங்கையில் ஆட்சி அமைத்துள்ள புதிய அரசின் பயணம் சிறந்த எதிர்காலத்தை தோற்றுவிக்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் 71 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் இன்று கலந்துகொண்டு சிறப்புரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற போரின் பின்னரான நாட்டைக் கட்டியெழுப்பும் நடவடிக்கையில், சகல இனங்களையும் அரவணைத்துக் கொண்டு இலங்கை அரசாங்கம் பயணிக்கிறது என்றும், இந்த பயணம் சிறந்த எதிர்காலத்தைத் தோற்றுவிக்கும் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
மியன்மார், இலங்கை, கொலம்பியா மற்றும் சைப்பிரஸ் ஆகிய நாடுகளின் எதிர்காலம் பாரிய முன்னேற்றம் காணும் எனவும் அவர் தமது உரையில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிற்கும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்னுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அவர்கள் இருவரும் நியூயோர்க் சென்றுள்ள நிலையில், நியூயோர்க்கில் வைத்தே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாகவும், இதன்போது நாட்டின் தற்போதைய நிலைமைகள் அபிவிருத்திகள் குறித்து வெளிவிவகார அமைச்சர், சயிட் அல் ஹூசெய்னுக்கு விளக்கமளித்துள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக நல்லிணக்க முனைப்புக்களின் முன்னேற்றம் குறித்தே இந்த சந்திப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை தற்போது ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கை விவகாரம் பேசப்படவில்லை என்பதை இலங்கையின் உள்ளூர் ஊடகங்கள் சில சுட்டிக்காட்டியுள்ளன.