யாழ்ப்பாணத்தில் நாளை நடைபெறவிருக்கும் ‘எழுக தமிழ்’ மக்கள் பேரணியை தடுத்தால், ஆபத்தான நிலைமையை நாடு எதிர்நோக்க வேண்டி ஏற்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ள அவர், நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவர தமிழ் மக்கள் பெரும் பங்காற்றியிருந்த போதிலும், இந்த அரசாங்கம் மகிந்த அரசாங்கம் பயணித்த பாதையிலேயே பயணிக்கிறது என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மீள்குடியேற்றம், கைதிகள் விடுதலை, காணாமல் போனவர்கள் விவகாரம் என்பவற்றில் இதுவரை எந்தவொரு உறுதியான தீர்வும் வழங்கப்படவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையிலேயே கடந்த தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கியிருந்த விடயங்களை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தி, ஆயிரக்கணக்கானவர்களின் பங்களிப்புடன் நாளை யாழ்ப்பாணம் முற்றவெளியில் ‘எழுக தமிழ்’ மக்கள் பேரணி நடைபெறவுள்ளது என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
இதில் பல்கலைக்கழக மாணவர்கள், இளைஞர் யுவதிகள், புத்திஜீவிகள், பொது மக்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொள்கின்றனர் என்றும் தகவல் வெளியிட்ட அவர், இதனை முடக்குவதற்கு அல்லது குழப்புவதற்கு இராணுவத்தினரோ அல்லது புலனாய்வுப் பிரிவினரோ முயற்சிக்கக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டதுடன், அவ்வாறு முயற்சித்தால் அது நாட்டை ஆபத்தான நிலைக்கே இட்டுச்செல்லும் என்றும் எச்சரித்துள்ளார்.
நல்லிணக்கத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்த வேண்டுமாயின் இரு தரப்பு பங்களிப்பு அவசியம் என்றும், தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கிய ஆணையை நிறைவேற்ற முடியாத நிலையில் நல்லிணக்கத்தையோ அல்லது நம்பிக்கையையோ ஏற்படுத்த முடியாது என்றும் அவர் விபரித்துள்ளார்.
சனநாயக ரீதியில் மக்களின் கோரிக்கைகளை முன்வைத்து நடத்தப்படும் எழுக தமிழ் பேரணியை குழப்பி நாட்டை மீண்டும் குழப்பமான நிலைக்குத் தள்ளவேண்டாம் என்றும் நாடாளுமன்றில் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் சனாதிபதி, பிரதமர் மற்றும் முக்கியஸ்தர்கள் வடக்கில் ஒன்றையும், தெற்கில் மற்றொன்றையும், அனைத்துலகத்திற்கு பிறிதொன்றையும் கூறி ஏமாற்றி வருகின்றனர் என்றும், உண்மையில் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு எந்தத் தீர்வையும் வழங்கவில்லை என்றும் அவர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.
அரசியலமைப்பினூடாக தீர்வொன்றை வழங்குவதாக அரசாங்கம் கூறுகின்ற போதிலும், ஒற்றையாட்சி முறையிலான தீர்வே வழங்கப்படும் என அரசு தரப்பில் கூறப்படுகிறது என்றும், இவ்வாறு ஏமாற்றும் வகையில் நடந்துகொள்வதன் ஊடாக நல்லிணக்கத்தையோ அல்லது நம்பிக்கையையோ ஏற்படுத்த முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளளனர் என்பதையும் நாடாளுமன்றின் கவனத்திற்கு கொண்டுவந்த அவர், இவர்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் நிபந்தனைகள் இன்றி பொது மன்னிப்பில் விடுதலை செய்யவேண்டும் என்றும், இதனூடாகவே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகள் வடக்கு, கிழக்குத் தவிர்ந்த வெளி மாவட்டங்களில் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதால் மொழிப்பிரச்சினை காணப்படுகிறமை மாத்திரமன்றி, இவர்கள் ஒரு வழக்கில் விடுவிக்கப்பட்டால் மற்றுமொரு வழக்கில் மீண்டும் கைதுசெய்யப்படுகின்றனர் என்பதையும் சிவசக்தி ஆனந்தன் நாடாளுமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.