தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நீக்கினால் ஏற்படும் விளைவுகள் குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சு தீவிர கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தினால் தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகள் இயக்கத்தை நீக்க வேண்டும் என்று, ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில், ஐரோப்பிய ஒன்றிய சமூகத்தின் பிரித்தானிய சட்டமா அதிபர் எலேனர் சாப்ஸ்ரன் கடந்த வியாழக்கிழமை பரிந்துரைத்திருந்தார்.
தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் விடுதலைப் புலிகள் மற்றும் ஹமாஸ் அமைப்புகளின் பெயர்களை நீடிக்க உத்தரவிட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் சார்பாக செய்யப்பட்ட மேன்முறையீட்டை தள்ளுபடி செய்யுமாறு எலேனர் சாப்ஸ்ரன் ஆலோசனை வழங்கியிருந்தார்.
இவரது பரிந்துரையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் நீதிபதிகள் மதிப்பளிப்பது வழக்கம் என்ற வகையில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை நீக்கத்தை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் உறுதி செய்யலாம் என்று கருதப்படுகிறது.
இதனையடுத்து ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதிமன்ற உத்தரவு தொடர்பாக தீவிரமாக கண்காணிக்குமாறு பிரசெல்சில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
நிலைமைகளை உன்னிப்பாக கண்காணிக்குமாறு அங்குள்ள தூதரகத்துக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
விடுதலைப் புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நீக்கி உத்தரவிட்டால், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் சொத்துக்கள், நிதி என்பன விடுவிக்கப்படும் என்பதுடன், விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் மீதான பயணத் தடையும் நீக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.