இரு இளைஞர்கள் காணாமல் போன வழக்கில் தொடர்புடைய ஐந்து இராணுவத்தினர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய 11 பேருக்கு பிடியாணை பிறப்பித்துள்ளது.
யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியை சேர்ந்த இரு இளைஞர்கள் காணாமல் போனமை தொடர்பில் 16 இராணுவத்தினர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 1998ம ஆண்டு சனவரி மாதம் 20ஆம் நாள் அச்செழு இராணுவத்தினரால் பிடித்து செல்லப்பட்ட பின்னர் அவர்கள் இருவரும் காணாமல் போயிருந்த நிலையில், யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றில் அது தொடர்பான வழக்கு நடைபெற்று வந்துள்ளது.
இந்த நிலையில் இன்றைய நாள் திங்கட்கிழமை மன்றில் முன்னிலையாகுமாறு 16 இராணுவத்தினருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டு இருந்தது.
குறித்த வழக்கின் விசாரணைகள் யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் சதிஸ்கரன் முன்னிலையில் இன்று இடம்பெற்ற போது 5 இராணுவத்தினர் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்த நிலையில், அவர்கள் ஐவரையும் எதிர்வரும் 10ஆம் நாள் வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் நீதிமன்றில் முன்னிலையாக தவறிய ஏனைய 11 பேருக்கும் நீதிபதி பிடியாணை பிறப்பித்துள்ளார்.