முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் அம்பாறை – பானமை பிரதேச மக்களிடமிருந்து பலாத்காரமாக பறிக்கப்பட்ட காணிகளை மீளக் கையளிக்கவேண்டுமென வலியுறுத்தி, யாழ்ப்பாணத்தில் இன்று கையெழுத்து பெறும் நடவடிக்கையும் துண்டுப் பிரசுர விநியோகமும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் கையெழுத்து பெறும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அதன் ஒரு கட்டமாகவே யாழில் இன்றைய தினம் இந்தச் செயற்பாடு இடம்பெற்றுள்ளது.
பானமை மக்களின் காணிகளை விடுவிக்க வேண்டுமென நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு, குறித்த காணிகளை வழங்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவும் பரிந்துரைத்திருந்தது.
அத்துடன் கடந்த மார்ச் மாதம் 30ஆம் நாள் பொத்துவில் மாவட்ட நீதிமன்றினால் பானமை மக்களின் காணிகளை மீண்டும் வழங்குமாறு தீர்ப்பளிக்கப்பட்ட போதிலும், குறித்த காணிகள் இதுவரை உரிமையாளர்களிடம் கையளிக்கப்படாத நிலையில், நீதிமன்ற தீர்ப்பை மதித்து மக்களது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தியே குறித்த கையெழுத்து பெறும் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
கடந்த 2010ஆம் ஆண்டு அப்போதைய மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் பானமை பிரதேச மக்கள் விரட்டியடிக்கப்பட்டு, அவர்களது காணிகள் பலாத்காரமாக கைப்பற்றப்பட்டமையால், குறித்த பிரதேச மக்களின் வாழ்வாதாரங்களும் பாரம்பரிய வாழ்விடங்களும் இழக்கப்பட்டு, காட்டுப் பிரதேசங்களில் குடியிருக்க வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது