இன்று யாழப்பாணத்தில் இடம்பெற்ற இலங்கையின் 42 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நாள் நிகழ்வுகளில் சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் – வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா சம்பந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் கடந்த 29 ஆம் நாள் முதல் 42 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் பல்வேறு தடகளப் போட்டிகள் இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.
தேசிய விளையாட்டுப் போட்டி வரலாற்றில் முதன்முறையாக யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஆரம்ப விழாவில் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கலந்துகொள்ளாத போதிலும், இன்றைய நாள் இடம்பெற்ற நிறைவு விழாவில் கலந்துகொண்டிருந்தார்.
மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்துகொண்டு வெற்றியாளர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்த இந்த நிகழ்வில், சனாதிபதியுடன் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த வைபவத்திற்கு முன்னதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு சென்ற மைத்திரிபால சிறிசேன, அங்கு அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்புத் திட்டத்தையும் ஆரம்பித்து வைத்துள்ளார்.
பல்கலைக்கழக மாணவர்களின் கோரிக்கைக்கமைய இந்த நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் வழங்கப்பட்டதுடன், எதிர்காலத்தில் மேலும் இரண்டு இயந்திரங்கள் நிறுவப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை பல்கலைக்கழகத்திற்குச் சென்ற மைத்திரிபால சிறிசேன, அங்கு மாணவர்களுடன் நட்புறவுடன் உரையாடி அவர்களது குறைகளையும் கேட்டறிந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.