சுவிட்சர்லாந்து நாட்டின் சமஷ்டி சபை உறுப்பினர் சிமோனிற்றா சோமறுக தலமையிலான குழுவினர் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இரண்டு நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டு இலங்கைக்கு சென்றுள்ள சுவிஸ் உயர்ஸ்தானிகர் தலைமையிலான எண்மர் அடங்கிய குழுவினர் இன்று யாழ் மாவட்டத்திற்கு பயணம் ஒன்றை மேற்கொண்டனர்.
இவர்கள் இன்று காலை 10 மணிக்கு யாழ். கைதடியில் அமைந்துள்ள வட மாகாண முதலமைச்சர் அலுவலகத்திற்கு சென்று முதலமைச்சர் விக்னேஸ்வரனையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இந்த சந்திப்பின் போது வட மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள், வட மாகாண சபையினால் முன்னெடுக்கப்படுகின்ற செயற்திட்டங்கள், சுவீஸ் அரசாங்கத்தினால் வட மாகாணத்தில் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் குறித்த குழுவினர் வடமாகாண முதலமைச்சரிடம் கேட்டறிந்து கொண்டனர்.
சுமோட்டாவுடனான இந்த சந்திப்பை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட வடமாகாண முதலமைச்சர், மத்திய அரசாங்கம் சம உரிமை கொடுத்து, வட மாகாண சபையுடன் பேசி, எமக்கு இருக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக தீர்வை தர முன்வந்தால் தான், எங்களால் நாட்டில் சம உரிமையுடன் ஒருமித்து வாழ முடியும் எனவும், அவ்வாறு இல்லை எனின் நல்லிணக்கத்தினை கொண்டுவருவது மிக கடினம் என்றும் இலங்கைக்கான சுவீஸ் உயர்ஸ்தானிகர் சுமோட்டா சோமூகவிடம் கூறியதாக தகவல் வெளியிட்டுள்ளார்.
அத்துடன் இந்த சந்திப்பின் போது சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வு கிடைக்கவேண்டும் என்று வலியுறுத்தியிருக்கும் முதலமைச்சர், சமஷ்டி தொடர்பாக தென்னிலங்கை சமூகம் தவறான பார்வையினை கொண்டிருக்கும் நிலையில் அதனை அனைத்துலக சமூகம் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேவேளை சுவிஸ் அரசாங்கம் வழங்கும் நிதி சரியான முறையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்க வேண்டும் எனவும் வடமாகாண முதலமைச்சர் சுவிஸ் நாட்டின் சமஷ்டி சபை உறுப்பினரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.