அண்மையில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்துக்கள் அரசியல் சாசனத்தை மீறியுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சிகள் தெரிவித்த குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசாங்கத் தரப்பு இன்று நாடாளுமன்றத்தில் நிராகரித்துள்ளது.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று நாடாளுமன்றம் கூடிய நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன, வட மாகாண முதலமைச்சரின் உரை நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தக் கருத்துக்களின் மூலம் வடமாகாண முதலமைச்சர் அரசியல் சாசனத்தை மீறியுள்ளதாக குற்றம் சாட்டிய தினேஷ் குனவர்த்தன, இதுகுறித்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிவிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
இந்த வேண்டுகோளுக்கு எதிர்ப்புத் தெரிவித்த ஆளும் கட்சியின் அமைப்பாளரும், அமைச்சருமான லக்ஷ்மன் கிரிஎல்ல, இந்த கருத்துக்களை வடமாகாண முதலமைச்சர் நிராகரித்துள்ளதாக தெரிவித்தார்.
எனவே, இது குறித்து மேலும் விவாதிப்பதில் எந்த பயனும் இல்லை என்று கூறிய அமைச்சர் கிரிஎல்ல, இனவாதத்தை தூண்டுவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் கூட்டு எதிர்கட்சியிடம் வேண்டுகோள் விடுத்தார்.
அமைச்சரின் பதில்களை ஏற்றுக்கொள்ள முடியாதென்று கூறிய உறுப்பினர் தினேஷ் குனவர்த்தன, வடமாகாண முதலமைச்சரின் கருத்துக்களை அரசாங்கம் கண்டிக்கின்றதா என்பதை பகிரங்கமாக கூற வேண்டுமென்று தெரிவித்தார்.
அதன் போது கருத்து தெரிவித்த சபாநாயகர் கரு ஜெயசூரிய, இது குறித்து பிரதமர் எதிர் காலத்தில் விரிவான பதிலொன்றை வழங்குவார் என்றும், இது குறித்து தொடர்ந்தும் விவாதம் நடத்திக்கொண்டிருக்க அனுமதிக்க முடியாது என்று குறிப்பிட்டு வழமையான நடவடிக்கைகளுக்கு செல்லுமாறு சபையில் அறிவித்தார்.
இன்று இடம்பெற்ற இந்த விவாதங்களின் போது அரசியல் சாசனத்தை வட மாகாண முதலமைச்சர் மீறியுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சிகள் தெரிவித்த குற்றச்சாட்டுக்களை எதிர்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனும் நிராகரித்துள்ளார்.
தாம் இனவாதத்தை தூண்டும் வகையில் உரையாற்றவில்லை என்பதை வட மாகாண முதலமைச்சர் பகிரங்கமாகவே தெரிவித்துள்ளதையும் சுட்டிக்காட்டிய இரா. சம்பந்தன், வட மாகாண முதலமைச்சர் வட மாகாண மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஒருவர் என்பதை மறந்துவிடக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.