இந்தியாவுக்கு மூன்று நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சு நடாத்தியுள்ளார்.
நேற்று முற்பகல் புதுடெல்லி சென்றிருந்த இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, இன்று காலை இந்தியாவின் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியும், முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் சந்தித்துப் பேச்சு நடாத்தியிருந்தனர்.
இதையடுத்து இன்று முற்பகல் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், இலங்கை பிரதமரைச் சந்தித்துப் கலந்துரையாடியுள்ளார்.
இதன் பின்னர் இன்று மதியம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஹைதராபாத் இல்லத்தில் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வரவேற்பு அளிததுடன், அவருக்கு மதியபோசன விருந்தும் அளித்துள்ளார்.
அத்துடன் இன்றைய நாள் இரண்டு நாட்டுப் பிரதமர்களுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுக்களின் போது, பிராந்திய பாதுகாப்பு, இரு நாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் ஆலோனைகளை நடாத்தியுள்ளனர்.
அதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, இந்தியா – பாகிஸ்தான் இடையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள போர் ஒரு தீர்வாகாது என்று இலங்கைப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்து சார்க் அமைப்பில் இடம்பெற்றுள்ள 8 நாடுகளும் விரிவாக ஆலோசனை நடாத்தி தீர்வு காண வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் சார்க் மாநாடு ஒத்திவைக்கப்பட்டதற்கு காரணம் என்ன என்பது தொடர்பிலும், என்ன நடந்தது என்பது குறித்தும் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை எவ்வாறு தடுப்பது மற்றும் எந்தெந்த விடயங்களில் 8 நாடுகளும் சேர்ந்து பணியாற்றுவது என்ற 2 முக்கிய விடயங்கள் சார்க் அமைப்பின் முன்னால் தற்போது முன்வைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதனால் இந்த இரண்டு விடயங்கள் குறித்தும் சார்க் நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்ட ரணில் விக்கிரமசிங்க, அதனை செய்யத் தவறுவோமே ஆனால் சார்க் அமைப்பு என்பது கேள்விக் குறியதாக அமைந்துவிடும் என்றும் கூறியுள்ளார்.