நீண்ட ஒரு மௌனம் கலைக்கட்டது.. செப்டம்பர் 24 அன்று.. யாழ்ப்பாணத்தில்….
அதன் தாக்கம் இப்போது சிங்களதேசத்தில் பல வடிவங்களில் எழுந்தாட தொடங்கி இருக்கிறது. மிகவும் எதிர்பார்த்த எதிர்வினைகள்தான்..
அதனை பிறகு பார்ப்போம்..
முதலில் இது தமிழ் மக்களுக்கு எந்தளவுக்கு முக்கியத்துவமானது என்று கொஞ்சம் பார்க்கலாம்.
தேசியத்தலைவர் தமது உரைகளிலும் பேச்சுகளிலும் அடிக்கடி சொல்வது போல இந்த உலகமானது தத்தமது நாடுகளின் லாபங்களுக்காக மட்டுமே இயக்கப்படுகின்றது..இதற்குள் அவர்கள் என்னதான் மானுட விழுமியம், உலக நாடுகளுக்கான மனித உரிமை சட்டங்கள் அது இது என்று எத்தனை பேசினாலும் தமது நாடுகளின் தேசிய லாபம் என்று வரும்போது எல்லாம் தூக்கி கடாசி எறிந்துவிட்டு தம் நாட்டின் லாபம் ஒன்றுக்காகவே ஒற்றைக் காலில் நிற்பார்கள்… இதுதான் தொடர்ந்து நடந்துவரும் வரலாறு…
யாரும் விதிவிலக்கு இல்லை..
அவரவர் தமது உரிமைகளுக்காக தாமே குரல் எழுப்பவும், தேவை ஏற்படின் தெருவில் இறங்கவும், மிக அவசியம் எனில் அடக்’குமுறையாளன் ஏந்தும் ஆயுதத்தை பறித்து ஏந்தவும் வேண்டியது வரலாறு காட்டும் வழியாகும்.
2009ல் தமிழர்களின் உரிமைக்கான விடுதலைப்போராட்டம் பின்னடைந்த பின்னர் இன்றுவரை ஏழுவருடங்களாக என்ன மாதிரியான ஒரு நிலைமை தமிழர் தாயகத்தில் இருக்கின்றது என்பதை ஒரு கணம் பார்த்தால் இந்த எழுக தமிழின் அவசியம் புரியும்.
2009க்கு பின்னர் தமிழர்கள் சிங்களவரால் வெற்றி கொள்ளப்பட்ட ஒரு இனம் என்ற ஒரு பார்வையிலிருந்தே மற்றைய எல்லாமே அணுகப்படுகின்றது என்பதே மிக முக்கியம்.வடக்கு கிழக்கு இணைப்பு போன்ற அரசியலமைப்பு சம்பந்தமான கோரிக்கை முதல் யாழ் பல்கலைகழகத்தில் கண்டிய நடனம் வலிந்து புகுத்தப்படுவது தேவையற்றது, கிழக்கு பல்கலைகழகத்தில் பேரினவாத மாணவர்களின் அட்டகாசம் போன்ற அன்றாட பிரச்சனைகள் வரை தமிழர்களின் அனைத்து கோரிக்கைகள், தேவைகள், எதிர்பார்ப்புகள் என்று அனைத்துமே வெற்றிபெற்ற சிங்கள இன மனோ நிலையின் கருணைக் கடைக்கண் அருள் ஒன்றின் தயவால் மட்டுமே கிடைக்கும் என்ற நிலைமை இப்போது.
ஏறக்குறைய ஒருவிதமான பிச்சை எடுக்கும் நிலைதான் தமிழர்களுடையது..அவர்களாக விரும்பி ஏதும் தட்டில் போட்டால்தான் என்ற நிலை..
றோட்டோரத்தில் குரும்பைசீவி விற்கும் சிங்களவர் முதல் அதிஉத்தம அடைமொழியுடன் அதிகாரமோச்சும் சிங்களதேச தலைவர் வரை அனைவருள்ளும் இருக்கும் உளம் இதுதான்.
படைமுகாம்களுள் இருக்கும் மக்களின் காணியை,வீடுகளை விடுவிக்க வேண்டும் என்பது உரிமை, நீதிமன்ற உத்தரவு என்று எவ்வளவு இருந்தாலும் ‘ நாம் விடுவிக்கமுடியாது ‘ என ஒரு படைதளபதிகள் பலரும்
பகிரங்கமாகவே மறுத்து கூறுவதும்,பின்னர், தமிழ் மக்கள் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த வீடுகளைகூட அவர்களுக்கு திருப்பி தருவதை ஏதோ போனால் போகிறது பிடித்து கொள்ளுங்கள் தோரணையில் திருப்பி வழங்குவதும் என்ன மாதிரியான மனோ இயல்பு…
பேரினவாத திமிர்தானே..?
ராணுவமுகாம்களுக்காக அபகரிக்கப்பட்ட நிலத்தில் இருக்கும் தெய்வங்களுக்கும் கூட இதே நிலைதான்…
இத்தனை மணித்தியாலங்களுக்குள் உங்களின் பூசைகளையோ,திருப்பலிகளையோ முடித்துக்கொண்டு கதவை மூடி வெளியேறிட வேணும் என்ற உத்தரவுகள்..
இதனைவிட தமிழர்கள் என்று சொல்வதற்கு மிக முக்கியமான ஒன்றாக இருக்கின்ற பாரம்பரிய நிலப்பரப்பு என்ற உரிமை, உயிர்மூச்சு மெதுமெதுவாக சிதைக்கப்பட்டு அரிக்கப்படுகின்றது..
கடலில்கூட தமிழர்களுக்கான மீனள்ளும் உரிமை பறிக்கப்பட்டுள்ளது.
வெளிப்பார்வைக்கு கார்பெட் வீதிகளும்,சந்தடிமிக்க கடைவீதிகளும்,சனம் திரளும் கோவில் திருவிழாக்களும் என்று இருந்தாலும்கூட ஒருவிதமான மூச்சுமூட்டும் அந்தர வாழ்வுதான் உள்ளுக்குள்..
சட்டம் ஒழுங்கு என்பது மிக திட்டமிட்டே சீர்குலைக்கப்பட்டு, மதுவும், போதை பொருளும் சமூகம் முழுதும் தூவி விடப்பட்டுள்ள இந்நிலை தொடர்ந்தால் எல்லாமே இழக்கப்பட்டுவிடும் என்ற இன்னொரு நிலையும் கவனத்தில் கொள்க.
சரி, இவ்வளவு இருந்தாலும்கூட, இதனை எதிர்த்து குரல் எழுப்பும் ஒரு அரசியல் தலைமையாக கூட்டமைப்பு இருக்கின்றதா என்றால் அது இன்னும் தேனிலவு முடியாத இணையாக ஊர்கோலம் போகிறது..
எல்லாவிதத்திலும் ஏமாற்று அரசியலையும், வாக்குறுதி அரசியலையுமே அது தொடர்கிறது..
உரிமைகள் மறுக்கப்படும்போது, பறிக்கப்படும்போது அதற்கு எதிரான தமது குரலை மக்களால் தெரிவு செய்யப்பட்ட (அது எப்படி என்பது வேறுவிடயம்) பிரதிநிதிகள் எழுப்ப வேண்டும் என்பது உரிமை இழந்த மக்களின் நியாயமான எதிர்பார்ப்புத் தானே..
ஆனால் இதற்கு நேர் எதிராக ஆளும் சிங்களத் தரப்பு சட்டத்தரணிகள் போன்று அரசியல்கைதிகள் விடுதலை என்றாலென்ன, உடுவில் மாணவிகள் போராட்டம் என்றாலென்ன, சம்பூர் மக்களின் காணி உரிமை என்றாலென்ன அனைத்து விடயங்களிலும் அரசாங்கத்துக்கு வக்காலத்து வாங்குவதிலேயே தமிழ் அரசியல் பிழைப்பு நகர்கிறது…
இந்த இடைவெளியூடாக தம்மை நல்லாட்சி என்று காட்டி உலக சான்றிதழ் பெற்றிட முயற்சி செய்யும் மைத்திரி-ரணில் கூட்டு அரசு..
இதனை நம்பி உருகும் உலக தலைமைகள்…
தமிழர்களின் பிரச்சனை என்பது ஏதோ ஒரு மத வேறுபாட்டு குழப்பநிலைமை என்று கோப்பை மூடிவிட உலகம் தயார் நிலையில்..
சர்வதேசத்துக்கும் சிறிது உறைக்க சொல்லவேண்டிய காலம் வந்துவிட்டது. 2009க்கு பின்பான இந்த ஏழு வருடங்களில் தமிழர் தேசிய உரிமை சம்பந்தமாக காத்திரமான, உறுதியான,நேர்த்தியான,வினைத்திறன் மிக்க ஒரு குரல் இல்லாத படியால் சர்வதேசம் நினைத்து முடிவெடுத்தது ‘ சிங்களத்திடம் எதனையும் பிச்சையாக தமிழர்களுக்கு போட்டால் எல்லாமும் இழந்திருக்கும் இந்நிலையில் அவர்கள் அதனை ஏற்றே ஆக வேண்டும் என…
ஆக சர்வதேசத்துக்கும் அவர்களின் அடைத்த காதுகள் திறபட,மூடிய மோன விழிகள் திறக்க குரல் கொடுத்து எழவேண்டிய தேவை ஒன்றும் முக்கியமானது..
இப்போது வேறு வழி ஏதும் இல்லை தமிழ் மக்களுக்கு…
தனி தனி மனிதர்களாக தமது மனங்களுக்குள் உணர்வுகளை தேக்கி வைத்து வெம்பி வெம்பி இருப்பதைவிட கூட்டாக இணைந்து எழ வேண்டிய ஒரு சரித்திர தேவை..
அடுத்த தேர்தல் வரட்டும் அப்போது பார்க்கலாம் என்று வாக்குசீட்டை ஆயுதமாக்கலாம் என்றால் அதற்கு இடையிலேயே உள்ளுரிலும் சர்வதேச அரங்கிலும் அனைத்தையும் எமது தமிழ் பாராளுமன்ற கதிரைகளின் துணையுடன் முடித்து அழித்துவிடும் சிங்கள தலைமைகள்..
காலமறிந்து அறிவிக்கப்பட்டது எழுக தமிழ் அறிவிப்பு.
எழுக தமிழ் நடக்கும் என்று தேதி அறிவிக்கப்பட்ட பின் சிங்களம் அதனை குழப்புவதற்கு எடுத்த எத்தனங்கள் எவ்வளவோ.. அத்தனைக்கும் குறைவில்லாமல் கூட்டமைப்பின் முக்கியத்’தர்களும் மிகவும் முக்கி முணகி பார்த்தார்கள் குழப்புவதற்கு…
வருட இறுதியில் அரசியலமைப்பு திருத்தப்படும்போது சிங்களம் வெள்ளித் தட்டில் வைத்து உரிமைகளை வழங்கும் என நம்புகின்றோம்..
எனவே பொறுத்து கொள்ளுங்கள் என்பதில் தொடங்கி எள்ளு சட்டி எரிக்கும் உரிமை எழுக தமிழ் நாளில் மட்டுமே கிடைக்கும் என்று எழுதிய பத்திரிகை வரை எல்லாவிதமான முயற்சிகளையும் செய்துதான் அடிபணிவு அரசியல் பேர்வழிகள் பார்த்தார்கள்.
எழுக தமிழ் அன்று எமது மக்கள் அந்த வெயிலுக்குள்ளும் திரளாக ஆயிரமாயிரமாக திரண்டு நகர்ந்ததை சங்கதி24 ன் நேரலையில் பார்த்தபோது என் இனமே நீ எழுந்துவிட்டாய்…
இதற்காக தானே அத்தனை ஆயிரம் மாவீரர்களும் கனவு கண்டார்கள், களமாடினார்கள், வீரமரணமடைந்தார்கள்…
இதோ நீ எழுந்துவிட்டாய்…
இதற்காகதானே.இந்த இனத்தின் தலைவன் முப்பது ஆண்டுகளுக்கும் மோலாக ஓடிஓடி உழைத்தான்..
இதோ நீ எழுந்துவிட்டாய்…
என்று உலக உயரம் ஒன்றின் மீதேறி கூவ வேண்டும் போன்றதொரு உணர்வு..
சிங்களதேசத்தின் 6ம்திருத்தம் அதுஇது என்று ஆயிரம் சங்கடங்கள் தமிழ் மக்கள் பேரவைக்கு இருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதே..
ஆனால் மக்களுக்கு என்ன தடை…
அவர்கள் ஏந்திய பதாகைகளில் எங்களின் நிலம் என்பதே உரத்து எழுந்திருந்ததை காண முடிந்தது..
ஓங்கி அறைந்த ஒரு உச்ச மொழியாக எழுக தமிழ் இருந்தது..
வீழ்ந்து கிடந்தே இன்னும் இருப்பார்கள் எண்ணியவர்களுக்கு ஒரு அதிர்ச்சி மொழியாக எழுக தமிழ் அமைந்திருந்தது..
அது முடிந்த மறுநாளே அதற்கு சிங்கள தரப்பில் இருந்து ஏதும் எதிர்வினை வருவதற்கு முன்னமேயே சுமந்திரன் பொறுக்க முடியாமல் பொங்கி அறிக்கை விட்டார். அதற்கு பிறகு தொடங்கி இன்றுவரை எழுக தமிழுக்கான சிங்கள தரப்பின் வன்மம் தொடர்கிறது..
எல்லா தமிழர்களையும் தமிழ்நாட்டுக்கு துரத்த வேணுமென என எழுந்த குரல் சிங்கள மகாவம்ச மனோ உணர்’வின் அண்மைய வெளிப்பாடு…
பாவம் மனோ கணேசன் துடித்துத்தான் போனார்..
அரசின் ஊதுகுழலாக உலாவரும் தன்னையும் சேர்த்தே தேரர் கூறி இருப்பதாக வெதும்பி அறிக்கையும் விட்டார்.
இந்த மனோ கணேசன் எழுக தமிழ் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் எழுக தமிழ் என்பதற்கு பதிலாக எழுக இலங்கையரே என நடத்துங்கள் என தமிழ் மக்களுக்கு அறிவுரை வழங்கிய மேதை அல்லவா..?
எழுக தமிழை கண்டு நாம் அஞ்சவில்லை என்று சத்தியம் செய்து அறிக்கைவிட வேண்டிய தேவை அரசின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனாவுக்கு ஏற்பட்டது..எழுக தமிழை கண்டு அஞ்சவில்லை..
வடக்கின் படைமுகாம்களை நீக்க மாட்டோம் என நல்லிணக்க மூகமூடியை கழட்டி வைத்து விட்டு உண்மைச் சிங்கள முகத்துடன் அறிக்கைவிட்டுள்ளார்.
தமிழர்களின் பாரம்பரிய நிலமான வவுனியாவில் வந்து தமிழர்களுக்கு உரிமை வழங்க கூடாது என ஆர்ப்பாட்டம் நடாத்தும் அளவுக்கு சிங்கள பேரினவாதம் தனது உண்மை முகம் காட்டுகிறது..
இத்தனைக்கும் தமிழர்கள் எழுக தமிழ் பேரணி மூலம் கேட்டது தமக்கு உரித்தான உரிமைகளையே அதற்கு சிங்களம் இப்படி எழுந்து கோர தாண்டவம் ஆடுவது உலகுக்கு பல செய்திகளை சொல்லும் என நம்பலாம்..வெறுமனே உள்ளுராட்சி சபைகளுக்கே உரிய அதிகாரங்களை தமிழர்க்கு வழங்கி அதன் மூலம் உலகை ஏமாற்றலாம் என்று நினைத்திருந்த சிங்களபேரினவாத தலைமைகளுக்கு எழுக தமிழ் நல்ல சம்மட்டி அடி..
அமெரிக்க பயணம், இந்திய பயணம், அதிமேதாவி தனமான இரண்டு சட்ட வார்த்தைகள் என்று சொல்லி சொல்லி சிங்கள பேரினவாதத்துடன் காலையில் கிரிபத்தும் (பால்ச்சோறு),இரவில் விருந்து என்று காலம் கடத்தலாம் என்று நினைத்திருந்த தமிழ் பாராளுமன்ற தலைமைக்கு விளக்குமாற்றால் விழுந்த அடி எழுக தமிழ்..
எழுக தமிழ் சர்வதேசத்துடன் எமது மக்கள் பேசிய ஒருவிதமான பேரணி மொழி..
தமிழர்களின் பிரதிநிதிகள் என்று சந்திப்புகள் செய்பவர்கள் சொல்வதற்கு மாறாக மக்கள் வேறு ஒன்றை கேட்டு எழுந்திருக்கிறார்கள் என்ற உண்மையை உலகத்துக்கு எழுக தமிழ் சொல்லி இருக்கிறது..
நல்லிணக்கம் செய்து விட்டோம், நல்லாட்சி நடக்கிறது என்று சர்வதேச விசாரணை முதல் சுன்னாகம் நீர் பிரச்சனை வரை அனைத்தையும் மறைத்து அரசியல் செய்த சிங்களத்தை தோலுரித்து காட்டி இருக்கிறது எழுக தமிழ்..
புலம்பெயர் தேசங்களில் தாயக நினைப்புடன் செயற்பட்டுவரும் செயற்பாட்டாளர்களுக்கு ஒரு புதிய வீச்சை, நம்பிக்கையை, ஓய்ந்து போகாத ஓர்மத்தை வழங்கி இருக்கிறது எழுக தமிழ்.
பெரியார் அணை முதல் காவிரி நீர் வரை அனைத்திலும் அடிவாங்கி அடிவாங்கிக் கொண்டிருக்கும் தாய்த்தமிழ் நாட்டு தமிழனும் இனிமேல் நாற்காலி அரசியல் தலைமையை நம்பாமல் எழ வேண்டும் ஒன்றாக என்ற பாடத்தை சொல்லி இருக்கிறது எழுக தமிழ்..
இப்படி பல விதமான தளங்களில் புதிய ஒரு சேதியை அழுத்தமாக பதிந்திருக்கும் எழுக தமிழ் ஒரு அடையாளமாக இருந்தாலும்கூட அது தொடர்ச்சியாக புலம்பெயர் தேசங்களிலும் தமிழகத்திலும் தமிழர் வாழும் தேசமெங்கும் நடாத்தப்படும் போதுதான் அது தமிழின எழுச்சியாக மாறும்..
அதற்கான முன்னுரையை அத்தனை கெடுபிடிகள் அச்சுறுத்தல் மத்தியிலும் எம் தேச மக்கள் செய்துள்ளார்கள்..
இனிமேல் நாம்????