யாழ்ப்பாணத்தின் பிரம்படி பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இனம் தெரியாத நபர்கள் இன்று அதிகாலை கைதுப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
யாழ்.பிரம்படி இரண்டாம் ஒழுங்கையில் உள்ள வீடொன்றின் மீது இன்று வியாழக்கிழமை அதிகாலை குறித்த கைத்துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்ற வீட்டின் உரிமையாளரின் மகன் கடந்த காலங்களில் யாழ்.நகர் பகுதியில் உள்ள இளைஞர் குழு ஒன்றுடன் முரண்பட்டுள்ளதாகவும், அதனை அடுத்து அக்கால பகுதியில் ஒருநாள் இரவு குறித்த அந்த இளைஞருடன் முரண்பட்ட குழுவினர் அத்துமீறி இளைஞனின் வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடாத்தியுள்ளதாகவும் தெரியவருகிறது.
அதனை தொடர்ந்து தாக்குதலுக்கு இலக்கான வீட்டார் யாழ்.காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ததை அடுத்து காவல்த்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளில் தாக்குதலாளிகள் இனம் காணப்பட்டனர்.
அதனை அடுத்து தாக்குதலாளிகளுக்கும் , தாக்குதலுக்கு இலக்கான வீட்டின் உரிமையாளருக்கும் இடையில் காவல்த்துறையினர் சமரசம் செய்து வைத்து, தக்குதலாளிகளிடம் இருந்து வீட்டின் உரிமையாளருக்கு நட்ட ஈடும் பெற்றுக் கொடுத்துள்ளனர்.
இவ்வாறான நிலையிலேயே குறித்த அந்த வீட்டின் மீது இன்று அதிகாலையில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நான்கு இளைஞர்கள் யாழ்ப்பாண குற்றத்தடுப்பு காவல்த்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அண்மைக்காலமாக இடம்பெற்று வந்த வாள் வெட்டு சம்பவங்களில் தொடர்புபட்ட நபர்களை காவல்த்துறையினர் தேடி வந்த நிலையில், நேற்று இரவு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் வெவ்வேறு இடங்களில் இருந்து குறித்த இநத் நான்கு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை இரண்டு கிலோகிராம் கஞ்சா பொதியை யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு கடத்த முயன்ற நபர் ஒருவரை யாழ்ப்பாணத்தில் வைத்து காவல்த்துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.
கொழும்புக்கு எடுத்துச் செல்வதற்காக சங்கானைப் பகுதியிலிருந்து கஞ்சா பொதியொன்று பேரூந்தில் கைமாற்றப்படுவதாக கிடைக்கப்பபெற்ற தகவலை அடுத்து, குறித்த பேரூந்தை மறித்துச் சோதனை செய்த காவல்த்துறையினர் குறித்த அநத சந்தேகநபரைக் கைதுசெய்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குறித்த கஞ்சா பொதியை கொழும்பிலுள்ள தனது நண்பருக்கு கொடுப்பதற்காக எடுத்துச் சென்றதாக சந்தேகநபர் தெரிவித்துள்ள நிலையில், சந்தேகநபரை காவல் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.