தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து, தமிழர்களை அழித்தொழித்து அடக்கியாளும் சிங்களத்தின் கடும்போக்கே தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் உந்துசக்தியாக திகழ்ந்து வருகின்றது என்பதன் அண்மித்த சாட்சியாக ‘எழுக தமிழ்’ எழுச்சிப் பேரணி உலகின் முன் முரசறைந்து நிற்கின்றது என அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை தெரிவித்துள்ளது.
இரண்டு தாசாப்தங்களாக சிங்கள பௌத்த பேரினவாத அரசுகளால் நிகழ்த்தப்பட்டுவந்த பேரழிவை எதிர்கொண்ட தமிழினம், தனது இருப்பிற்காகவும் தனது பாதுகாப்பிற்காகவும் ஆயுதம் ஏந்திப் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டதன் வெளிப்பாடாகவே தமிழீழ விடுதலைப் போராட்டம் கருக்கொண்டது என்பதனையும் அது சுட்டிக்காட்டியுள்ளது.
தமிழர்களின் இருப்பிற்காகவும், பாதுகாப்பிற்காகவும் ஏந்திய ஆயுதங்கள் அதற்காகவே மௌனிக்கப்பட்ட பின்னர், தமிழர் தாயகத்தில் தடையின்றி மேற்கொள்ளப்பட்டுவரும் சிங்களக் குடியேற்றங்கள், அரசமரத்தடியெங்கும் புற்றீசல்களாக முளைத்துவரும் புத்தர் சிலைகள், ஊர்தோறும் கட்டியெழுப்பப்பட்டுவரும் புத்த விகாரைகள் என்பன தமிழர்களின் இருப்பிற்கே உலைவைக்கும் நோக்கிலேயே ஆயுத முனையில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அது தெரிவித்துள்ளது.
இவைதவிர இனப்படுகொலை விவகாரம், இராணுவ ஆக்கிரமிப்பு, உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் பல்லாயிரம் ஏக்கர் நிலங்கள் மீதான தொடரும் ஆக்கிரமிப்பு, பயங்கரவாத தடைச் சட்டத்தின் நீடிப்பு, அரசியல் கைதிகளின் விவகாரம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், கையளிப்பு செய்யப்பட்டவர்கள், சரணடைந்தவர்கள் விவகாரம், வடபகுதி மீதான போதைப்பொருள் ஆக்கிரமிப்பு விவகாரம் என பற்பல விவகாரங்களின் நீட்சியானது தமிழர்கள் தொடர்ந்தும் அரசியல் ரீதியாக வஞ்சிக்கப்பட்டுவருவதன் வெளிப்பாடே என்பதையும் அது சுட்டிக்காட்டியுள்ளது.
ஆயுத மௌனிப்பிற்குப் பின்னர் சனநாயக வழியில் தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழர்களின் பிரதிநிதிகளாக அங்கீகரிக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது, இவற்றிற்கு தீர்வினைக் காண முயற்சிக்காது இணக்க அரசியல் பொறிக்குள் தாமாகவே தம்மை சிக்கவைத்து கொண்டு, நல்லாட்சி அரசின் தாங்கு தூண்களாக செயல்பட்டுவரும் தமிழின விரோத நிலைப்பாட்டின் எதிர்வினையாகவே ‘தமிழ் மக்கள் பேரவை’ தோற்றம்பெற்றுள்ளது எனவும் அது விபரித்துள்ளது.
முதிர்ந்த அறிவாற்றலும் நீதி நெறி தவறாத மேன்மையும் ஒருங்கே கொண்டமைந்த வட மாகாண முதல்வர் நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களை இணைத்தலைவராகக் கொண்டு, தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களின் பங்கேற்புடன் உருவாக்கப்பட்டு, அரசியல் ரீதியாக தம்மை நிலைநிறுத்திக்கொள்ளாத அரைகுறை வளர்ச்சி நிலையில் இருக்கும் ‘தமிழ் மக்கள் பேரவை’, காலத்தின் அவசரம் – அவசியம் உணர்ந்து ஏற்பாடு செய்த ‘எழுக தமிழ்’ எழுச்சிப் பேரணியானது, தமிழினத்தின் இருப்பிற்கானதே அன்றி இனவாதத்திற்கானதல்ல எனவும் அது விளக்கமளித்துள்ளது.
சில மாதங்களில் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற தேனில் குளிப்பாட்டி அறிமுகப்படுத்தப்படவிருக்கும் அரசியலமைப்புத் திருத்தமானது ஒட்டுமொத்தமாக எமது அரசியல் அபிலாசைகளை குழிதோண்டிப் புதைக்கும் பொறி எனவும், நாம் தொடர்ந்து மௌனமாக இருந்தோமானால், அடிபணிவு அரசியல்வாதிகள், செயற்பாட்டாளர்களின் துணையுடன் கனத்த இருட்டிற்குள் மூடுமந்திரமாக தயாரிக்கப்பட்டுவரும் அரசியலமைப்புத் திருத்தமானது, அவசரகதியில் எம்மீது திணிக்கப்படும் அபாயம் உள்ளது எனவும் அது எச்சரித்துள்ளது.
ஏழாண்டு மௌனம் கலைத்து தாயக மக்கள் எழுச்சிக் கோலம் பூண்டுள்ள இத்தருணத்தில், அதனை வலுப்படுத்தி தமிழர் தரப்பின் பேரம்பேசும் ஆற்றலாக வளர்த்தெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாய எனவும், அதனை நோக்கி தமிழ் மக்கள் பேரவை தனது செயல்பாடுகளை முன்னெடுப்பது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவுக்கு அவளவு தமிழ்ச் சமூகம் அதற்கு இறுதிவரை உறுதியாக நிற்பது அவசியம் எனவும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை மேலும் தெரிவித்துள்ளது.