பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து மலையகம் எங்கிலும் பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், குறித்த மக்களின் நியாயமான கோரிக்கைகள் உள்வாங்கப்பட்டு பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை குறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மாறிமாறி ஆட்சிக்குவரும் அரசுகளும் தோட்டக்கம்பனிகளும் தொழிலாளர்களிடமிருந்து உழைப்பை பெற்றுக்கொண்டாலும், அவர்களது உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை வழங்கத் தவறியுள்ளன என்றும் அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
தேர்தல் காலங்களில் இவர்களுக்கான சம்பள உயர்வு பற்றி அனைவரும் பேசிக்கொண்டாலும் பின்னர் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளமையே வரலாறாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது அரசியல் பேதமின்றி அனைத்து தோட்டத் தொழிலாளர்களும் சம்பள உயர்வுகோரி வெகுசன போராட்டத்தை ஆரம்பித்துள்ள நிலையில், இவர்களின் நியாயமான கோரிக்கை அரசாங்கத்தினாலும், தோட்ட நிர்வாகத்தினாலும் கவனத்திற்கொள்ளப்பட்டு பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் நியாயபூர்வமான விடுதலை போராட்டத்திற்கு மலையக மக்கள் வழங்கிய பங்களிப்பு அளப்பரியது என்றும், அதனை யாரும் மறக்கமுடியாது என்றும் அவர் விபரித்துள்ளார்.
இந்த நிலையில் எமது தொப்புள்கொடி உறவுகளான பெருந்தோட்ட தொழிலாளர்களின் சனநாயக போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவை வழங்கவேண்டும் என்றும் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.