இலங்கையின் புதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படும் கருத்துக்களில் உண்மையில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
பௌத்த மதத்திற்கு தற்போதைய அரசியல் யாப்பில் வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையை, தொடர்ந்தும் அவ்வாறே புதிய அரசியல் யாப்பிலும் பேணுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்துக் கட்சிகளும் முழுமையான இணக்கத்தை தெரிவித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.
இந்த நிலையிலேயே பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறுவதை பேன்ற இணக்கப்பாடு எதனையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கவில்லை என்று தெரிவித்துள்ள சுமந்திரன், புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்து நியமிக்கப்பட்டுள்ள வழிநடத்தல் குழுவில் இதுகுறித்து கலந்துரையாடப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை மகா நாயக்கர்கள் கூறுவதைப் போல் அரசியலமைப்பை உருவாக்க முடியாது என்றும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்திருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, யார் என்ன கூறினாலும் தமக்கேற்ற விதத்திலேயே அரசியலமைப்பு உருவாக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
பிரதமரின் அந்த கூற்று தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ள சுமந்திரன், இந்த விடயம் குறித்து பத்திரிகைகள் வெளியிடும் தலையங்களே மக்கள் மத்தியில் அதிருப்தியான நிலையை தோற்றுவிப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.