தமிழ் மக்களின் புரிந்துணர்வை வேடிக்கை பார்க்கும் நிலையில் தான் இலங்கையின் தற்போதைய அரசாங்கம் செயற்படுவதாகவும், மாகாண சபைகள் மீதும் அது தான்தோன்றித்தனமாகவே செயற்படுகின்றது என்றும் இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஜோர்ன் றோதமிடம் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்ட இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர், யாழ் கோவில் வீதியில் அமைந்துள்ள வடமாகாண முதலமைச்சரின் இல்லத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை விக்னேஸ்வரனைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இந்தக் கலந்துரையாடலின் பின்னர் அது தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிட்ட வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், எமக்கான சுய உரிமை நிர்ணயம், மக்களின் அபிலாசைகள் என்பன இன்னும் ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது என்ற பழமொழியில்தான் இருந்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
வடமாகாணத்தில் ஜேர்மன் அரசினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள், மாவட்ட ரீதியாக முன்னேடுக்கப்பட்டுள்ள செயற்றிட்டங்கள், மீள்குடியேற்றங்கள், சுகாதார, கல்வி, வீடமைப்புத் திட்டங்கள், சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் தொடர்பாகத் தூதுவர் தன்னிடம் கேட்டறிந்து கொண்டதாகவும் அவர் விபரம் வெளியிட்டுள்ளார்.
நடுவண் அரசு மாகாண சபைகளின் மீது தான்தோன்றித்தனமாகச் செயற்படுகின்றது எனவும், இதனால் தங்களால் முன்னெடுக்கப்படும் பல செயற்பாடுகளுக்கும் பல்வேறு இடையூறுகள் காணப்படுகின்றன என்பதையும் யேர்மன் தூதுவரிடம் விளக்கிக் கூறியுள்ளதாகவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.