தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்த இடங்களில் சிங்கள மக்களை குடியேற்றுவதற்கு அனுமதிக்க மாட்டோம் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபையின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற நிலையில், இதில் கலந்துகெர்ணடு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
வாகரைப் பிரதேசத்தில், சிங்கள மக்கள் 178 பேர் வாழ்ந்தாக கிழக்கு மாகாண ஆளுநர் கடந்த ஒரு வருடமாகக் கூறிவந்ததாகவும், தற்போது அவர்கள் வாழ்ந்த காணிக்கான அனுமதிப்பத்திரம், சிங்கள மொழியில் அனுப்பட்டுள்ளதகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு போதும் சிங்களத்தில் காணி அனுமதிப் பத்திரம் வழங்கப்படவில்லை என்ற வகையில், சிங்களத்தில் காணி அனுமதிப் பத்திரம் எவ்வாறு வந்தது என்ற விடயம் தொடர்பில் ஆராயப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சிங்கள மக்கள் வாழ்ந்திருந்தால் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்திருக்க வேண்டும் என்பதனையும், விவசாயம் செய்திருந்தால் பி.எல்.ஆர் இருந்திருக்க வேண்டும் என்பதனையும், இடம்பெயர்ந்தவர்கள் என்று கூறப்பட்டால், அங்கு வாழ்ந்த காலத்தில் பிறந்த குழந்தைகளுக்கு பிறப்புப் பதிவுகள் வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த கிராமத்துக்குச் சிங்களப் பெயர் இருந்திருக்குமெனில் அதுவும் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ள அவர், இவ்வாறான ஆவணங்கள் சரியான முறையில் சமர்ப்பிக்கப்படாமல், அவர்களைக் குடியேற்ற முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
வாகரை புச்சாக்கேணி கிராமத்தில் அரச குடியேற்றக் காணிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான ஆவணஙகள் தன்னிடம் உள்ளதாகவும் தெரிவித்துள்ள யோகேஸ்வரன், இது தொடர்பாக பிரதேச செயலாளர் நடவடிக்கையெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.