தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் உத்தியோக பூர்வமாக ஒரு பேச்சுக்கு செல்வதற்கு, கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும், அரசாங்கமும் உடன்படவில்லை என்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
போர் முடிந்து 7 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், போரால் இடம்பெயர்ந்துள்ள மக்களில் ஒரு பகுதியினர் மட்டுமே தமது சொந்த காணிகளில் மீள்குடியேறியுள்ள நிலையில், ஏனையவர்கள் கால்நூற்றாண்டு காலமாக அகதி முகாம்களிலேயே வாழ்கிறார்கள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மீளக்குடியேறியுள்ள மக்கள் தமது சொந்தக்காணிகளில் வசித்தாலும் கூட அவர்களுக்கு தேவையான நிரந்தர வீட்டுத்திட்டம், வாழ்வாதாரம் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் போன்ற அடிப்படை தேவைகள் செய்து கொடுக்கப்படாத நிலைமையே தொடர்வதாகவும், இதனால் ஆண்டுதோறும் ஏற்படும் பருவமழை காலங்களிலும், கடும் வெப்பம் நிலவும் காலங்களிலும் தற்காலிக வீடுகளில் உள்ள மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில், குறைந்தபட்சம் இந்த போரால் உயிரிழப்புகள், சொத்திழப்புகள் என்பவற்றால் பாதிக்கப்பட்டோர் மட்டுமன்றி காணாமல்போனோரின் உறவுகள், நீண்டகாலம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள் போன்றோர்கள், அடிப்படை வசதிகள் எதும் இன்றி உள்ளதைப்ப பற்றி சிறிதேனும் அரசாங்கம் அக்கறை கொள்வதாக தெரியவில்லை எனவும் அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்