அணை மற்றும் சாலைக் கட்டமைப்புக்கு உட்பட்ட வகையில், இருதரப்பு நடைமுறைக்கேற்ற ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு சீன, இலங்கை ஆகிய நாடுகளின் தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
கோவாவில் நடைபெறும் எட்டாவது பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கும், இலங்கை சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் நேற்றிரவு இடம்பெற்ற இருதரப்புப் பேச்சுக்களின் போது கருத்து வெளியிட்ட சீன அதிபர், இலங்கை – சீன உறவுகள் ஆரோக்கியமான முறையில் வளர்ச்சியடைந்து வருவதாகவும், தலைமுறைகளைக் கடந்து நிற்கும் இலங்கையுடனான பாரம்பரிய நட்புறவை முன்னகர்த்துவதற்கு சீனா பணியாற்றும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு நாடுகளும் உயர்மட்ட தொடர்புகள் மற்றும் அரசியல் தொடர்பாடல்களை பேணி வருவதாகவும், பரஸ்பரம் கரிசனைக்குரிய விவகாரங்களில் இருநாடுகளும் ஒன்றுக்கொன்று ஆதரவு அளித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
வர்த்தகம், துறைமுக இயக்கம், உட்கட்டமைப்பு கட்டுமானங்கள், துறைமுகங்களை அண்டிய கைத்தொழில் பூங்காக்கள், உற்பத்தி ஆற்றல் மற்றும் வாழ்வாதார துறைகளில் இருநாடுகளுக்கும் இடையில் ஆழமான உறவுகளை வலுப்படுத்துவதற்கும் சீன அதிபர் அழைப்பு விடுத்துள்ளார்.
கொழும்பு துறைமுக நகரம் மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற பாரிய கூட்டுத் திட்டங்களை இருதரப்புகளும் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்றும், சுற்றுலா, சமுத்திரம், பாதுகாப்பு, மற்றும் அனர்த்த தயார் நிலை, குடிவரவு ஆகிய துறைகளிலும் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் விரிவாக்குவதற்கும் சீன அதிபர் பரிந்துரைத்துள்ளார்.
அத்துடன் அனைத்துலக மற்றும் பிராந்திய விவகாரங்களில் இரண்டு நாடுகளும் ஒன்றுக்கொன்று தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் சீன அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட இலங்கை சனாதிபதி, இலங்கையின் அபிவிருத்திக்கும், அனைத்துலக அரங்கிலும் இலங்கைக்கு சீனா அளித்து வரும் ஆதரவுக்கும் நன்றி தெரிவித்ததுடன், பாரிய திட்டங்கள் உள்ளிட்ட சீனாவுடன் செய்து கொள்ளப்பட்ட பொருளாதார மற்றும் வர்த்தக உடன்பாடுகளை துரிதமாக நடை முறைப்படுத்துவதற்கும் விருப்பம் வெளியிட்டுள்ளார்.
அத்துடன் இலங்கையில் சீன தொழிற்துறையினரின் முதலீடுகளையும் மைத்திரிபால சிறிசேன வரவேற்று உரையாற்றியுள்ளார்.