ஒன்ராறியோவின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் நேற்று வீசிய பலத்த சூறைக் காற்றுடன் கூடிய மழை காரணமாக ஆயிரக்கணக்கானோர் மின்வினியோகம் இன்றி அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஜோர்ஜியன் பேயில் இருந்து Owen Sound பகுதி வரையானவர்கள் மற்றும் தென்கிழக்கு பிராந்தியத்தில் இருந்து கிங்ஸ்டன் பிராந்தியம் வரையானவர்கள் என பத்தாயிரத்திற்கும் அதிகமான தமது வாடிக்கையாளர்கள் நேற்று நள்ளிரவில் மின் தடையினை எதிர்கொண்டதாக ஹைட்ரோ வண் தெரிவித்துள்ளது.
நேற்றைய இந்த சூறைக் காற்றினால் கட்டங்கள் சிலவும் சேதமடைந்துள்ளதாக ஒன்ராறியோ மாகாண காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சூறைக் காற்றினால் வர்த்தக நிலையம் ஒன்றின் கூரைப் பகுதி தூக்கி வீசப்பட்டுள்ள படங்களும், கட்டிடம் ஒன்று இடிந்து வீழ்நததில் அதற்குள் கார் ஒன்று சிக்குண்டுள்ளதனை காட்டும் படங்களும் சமூக வலைத்தளங்களில் தரவேற்றப்பட்டுள்ளன.
பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதுடன், மின் வினியோகத் தடங்களும் அறுந்து வீழ்ந்து கிடக்கும் நிலையில், இருண்ட சூழலில் வாகனங்களை எடுக்கச செல்வோரை அவதானத்துடன் இருக்குமாறு காவல்த்துறையினர் எச்சரித்துள்ளனர்.
பல்வேறு வீதிச் சந்திப்புப் பகுதிகளிலும் மின்விளக்குகள் இயங்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ள அதிகாரிகள், வீதிகளில் வீழ்ந்துள்ள மரங்கள் மற்றும் மின் தடங்களை அகற்றுவதற்கான நடவடிக்கையில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாகவும், முடியுமானவரை மக்கள் வீட்டை விட்டு வெளியேறாது இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.