இலங்கையின் வடபகுதியில் 150,000இற்கும் அதிகமான இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளதால் மக்களின் சுமூகவாழ்வு சீர்குலைந்து சமூகத்தில் வன்முறைகள் பெருகியுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இலண்டன் கிங்ஸ்ரன் நகர சபையில் நடைபெற்ற யாழ்ப்பாணம் – கிங்ஸ்ரன் மாநகருக்கிடையிலான ‘இரட்டை நகர’ உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
பொதுமக்களின் குடியிருப்புக்கள், நிலங்கள், வர்த்தக மையங்களில் இராணுவம் குடிகொண்டிருப்பதனால் மக்களின் வளங்கள் பறித்தெடுத்திருப்பதுடன், அங்கு வாழும் விதவைகள் மற்றும் ஏனையவர்களின் நல்வாழ்வு அச்சுறுத்தல் நிலையில் இருப்பதாகவும் அவர் விபரித்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டம், தேசிய பாதுகாப்பு என்பன மக்களுக்கு நீதி பெறுவதற்கான வாய்ப்பை இல்லாமல் செய்வதாகவும், இதனால் ஒன்றிணைந்த சமூகத்தை கட்டியெழுப்ப முடியாதுள்ளது என்றும் அதிருப்தி வெளியிட்ட அவர், மனிதநேய மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு சிந்தனை ஆகியவற்றை நிர்வாகமானது கொண்டிருக்க வேண்டும் என்றும் கூறினார்.
அத்துடன் அனைத்து விடயங்களிலும் வட மாகாண சபை மத்திய அரசாங்கத்தினால் புறக்கணிக்கப்படுவதாகவும் திட்டங்கள் யாவும் மத்திய அரசால் முடிவுசெய்யப்பட்டு மாகாண சபை மீது திணிக்கப்படுகின்றது என்றும் அவர் ஆதங்கம் வெளியிட்டு்ள்ளார்.
இதேவேளை குறித்த இந்த இரட்டை நகர உடன்படிக்கை மூலம் பல்வேறு திட்டங்களை புலம்பெயர் தமிழ் மக்களின் உதவியுடன் யாழ்ப்பாணத்தில் நடைமுறைப்படுத்த முடியும் என்றும் வட மாகாண முதலமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.