வடக்கில் படைக்குறைப்புச் செய்து, நல்லிணக்க முயற்சிகளை இலங்கை அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்று சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகள் சிறப்பு அறிக்கையாளர் ரிட்டா ஐசக் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் கடந்த பத்து நாட்களாகத் தங்கியிருந்து, சிறுபான்மையினர் விவகாரங்கள் தொடர்பான பிரச்சினைகளைக் கேட்டறிந்த அவர், நேற்று தனது பயணத்தின் முடிவில் கொழும்பில் நடாத்திய செய்தியாளர் சந்திப்பின்போதே இவ்வாறு கூறியுள்ளார்.
மறுசீரமைப்பு மற்றும் நல்லிணக்க வாக்குறுதிகளைக் கொடுத்து கடந்த ஆண்டு பதவிக்கு வந்த இலங்கை அரசாங்கம், போரினால் ஏற்பட்ட காயங்களைக் குணப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும், இலங்கையில் உள்ள சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் சில அவசரமான, முக்கியமான, உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
வடக்கில் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ள நிலங்களை மீள ஒப்படைக்க வேண்டும் என்பதுடன், படைக்குறைப்பை மேற்கொண்டு, பொதுமக்களின் செயற்பாடுகளில் இருந்து படையினரை விலக்கிக் கொள்ள வேண்டும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீண்டகாலமாக எந்தக் குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது விடுதலை செய்ய வேண்டும் எனவும், இராணுவத்திடம் உள்ள அதிகாரங்களை சிவில் அதிகாரிகளுக்கு மாற்றுவது தொடர்பான தெளிவான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இனங்களுக்கிடையில் பரஸ்பர நம்பிக்கையீனங்கள் நிலவுகின்ற நிலையில், இந்த நம்பிக்கையீனங்கள் களைப்படுதல் அவசியம் எனவும் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் ரிட்டா ஐசக் வலியுறுத்தியுள்ளார்.
நல்லிணக்கம் தொடர்பான வாக்குறுதிகளின் மீதே மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் பதவிக்கு வந்தது என்ற வகையில், சிறுபான்மையினரின் உரிமைகளை உதாசீனம் செய்து, அந்த நம்பிக்கைகளை அரசாங்கம் சிதைத்து விடக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.