முல்லைத்தீவில் காவல்த்துறையினரைத் தாக்கும்போது தற்பாதுகாப்பிற்காக கூட ஆகாயத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்ய அஞ்சும் காவல்த்துறையினர் யாழ்ப்பாணத்தில் அப்பாவி மாணவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்வது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக வட மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார்.
வட மாகாண சபையின் 64வது அமர்வு நேற்றைய நாள் அவைத் தலைவர் சிவஞானம் தலமையில் இடம்பெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கொக்குளாய் கடற்பரப்பில் கடந்த 17ஆம் நாள் அன்று குடாத்துறை , புளியமுனை மீனவர்கள் மீதும் காவல்த்துறையினர் மீதும் பிற மாவட்ட மீனவர்கள் தாக்குதல் மேற்கொண்டனர்.
குறித்த சம்பவத்திற்கு காவல்த்துறையினர் எவ்வித சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பதனைச் சுட்டிக் காட்டி, பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரேரணை ஒன்றைச் சமர்ப்பித்து உரையாற்றும்போதே ரவிகரன் இதனையும் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவில் கடந்த 17ஆம் நாள் அன்று குடாத்துறை , புளியமுனை மீனவர்களை காவல்த்துறையினர் மற்றும் திணைக்களத்தினர் அழைத்துச் சென்ற வேளையில், தமிழ் மீனவர்களையும் காவல்த்துறையினரையும் பிற மாவட்ட மீனவர்கள் தாக்கிய போது, தமிழ் மீனவர்களும் காவல்த்துறையினரும் காயமடைந்த போதிலும், அங்கு நின்ற காவல்த்துறையினர் தற்பாதுகாப்பிற்காக ஆகாயத்தை நோக்கியேனும் துப்பாக்கிப் பிரயோகம் செய்யவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு ஓர் இனத்தவர்கள் தாக்கும்போது அஞ்சும் காவல்த்துறையினர், யாழ்ப்பாணத்தில் மட்டும் அப்பாவி மாணவர்கள் மீது நேரடியாகவே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்வது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே காவல்த்துறையினர் தமது பணிகளை நேர்மையாக சரிவரச் செய்யயுமாறு மாகாணசபை காவல்த்துறையைக் கோர வேண்டும் எனவும், குறிப்பாக முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் விடயத்தில் காவல்த்துறையினர் நீதியாகச் செயல்படுமாறு வலியுறுத்த வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.