போர் நிறைவடைந்துள்ள நிலையிலும் வடக்கு கிழக்கு கடற்பகுதிகளில் படையினரின் கெடுபிடிகள் தொடர்ந்த வண்ணமே உள்ளது என சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற கடற்றொழில் மற்றும் நீர்வளங்கள் ஒழுங்கு விதிகளை அதிகரிப்பது தொடர்பான சட்டமூல விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்துள்ள அவர், பாதுகாப்புத் தரப்பின் இவ்வாறான கெடுபிடிகளை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
போர்க் கால பாதிப்பிலிருந்து மீண்டுவரும் வடக்கு, கிழக்கு மீனவ சமூகத்தினர் மீதான படையினரின் கெடுபிடிகளானது பாரிய அசௌகரியங்களை ஏற்படுத்தி வருவதுடன், மீன்பிடிக்கும் பகுதிகளில் தற்போது சுற்றுலா விடுதிகளுக்கு முக்கியத்தும் அளிக்கப்படுகின்றது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் பிரகாரம் மீன்பிடி பகுதிகள் கடற்படை மற்றும் தரைப்படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது எனவும், இதன் காரணமாக மீன்பிடித்துறைகள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே மீன்பிடித் துறைகளில் காணப்படுகின்ற பாதுகாப்புத் தரப்பினரின் கெடுபிடிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும், சுற்றுலா விடுதி மற்றும் பாதுகாப்புத் தரப்பின் கெடுபிடியிலிருந்து மீனவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை சில மீன்பிடி உபகரணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தடையை மீனவ சமூகத்தினரது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு குறிப்பிட்ட சில காலத்திற்கேனும் தளர்த்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.