இந்திய தூதரக அதிகாரி 48 மணி நேரத்துக்குள் தங்கள் நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டுமென பாகிஸ்தான் அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்திய இராணுவ இரகசியங்களை உளவு பார்த்ததாக டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் அதிகாரியாக பணியாற்றிவரும் முகமத் அக்தர் என்பவரை டெல்லி காவல்த்துறையினர் கைது செய்ததுடன், அவர்ரிடம் நடாத்திய சோதனையின் போது அவரிடம் இந்திய இராணுவம் தொடர்பான இரகசிய ஆவணங்கள் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்திய இராணுவ நிலைகள் அமைந்து இருக்கும் வரைபடங்கள், இந்திய படைகளின் நடமாட்டம், இராணுவ வீரர்களின் எண்ணிக்கை மற்றும் பாதுகாப்புத் துறை தொடர்பான இரகசிய ஆவணங்களை அவர் வைத்திருந்த நிலையில், அவற்றைப் பறிமுதல் செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்த கைது குறித்து இந்தியாவுக்கான பாகிஸ்தான் துணைத் தூதர் அப்துல் பாஸித்துக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவிக்கை ஒன்றையும் அனுப்பி வைத்திருந்தது.
இந்த நிலையில் பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய உயர்தூதரகத்தில் பணியாற்றிவரும் அதிகாரியான சுர்ஜீத் சிங் என்பவரை விரும்பத்தகாதவர் என அறிவித்து, அவரை 48 மணிநேரத்துக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதேவேளை பாகிஸ்தானுக்காக உளவுபார்த்ததாக அந்த நாட்டின் தூதரக அதிகாரியை இந்தியா கைது செய்த நடவடிக்கைக்கு பழிக்குப் பழி வாங்கும் எதிர்நடவடிக்கையாக பாகிஸ்தான் இந்த அறிவிப்பை விடுத்துள்ளதாக விர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே இந்தியா-பாகிஸ்தான் இடையிலான நட்புறவு மிக மோசமான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்தியாவுடனான வர்த்தக தொடர்புகளை துண்டிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் தொழில், வர்த்தகசபை வலியுறுத்தியுள்ளது.
தற்போது நிலவிவரும் சூழலின்படி, இந்தியாவுடன் வர்த்தக உறவுகளை தொடரவேண்டிய எந்த நிர்பந்தமும் பாகிஸ்தானுக்கு இல்லை என்று பாகிஸ்தான் தொழில், வர்த்தகசபையின் தலைவர் அப்துல் ரவூப் ஆலம் கருத்து வெளியிட்டுள்ளார்.
பாகிஸ்தானில் உள்ள ஒட்டுமொத்த வர்த்தக சமுதாயமும் ஒன்றிணைந்து, இந்தியாவுடன் இனியும் வர்த்தக உறவுகளை தொடர முடியாது என்பது உள்பட எந்த முடிவையும் எடுக்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.